Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூலை 05

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூலை 5


🔸️ கிறிஸ்துவின் தாழ்மையான சிந்தை வேண்டும்! 🔸️


நம்மை நாமே தாழ்த்துவதுதான் ஆவிக்குரிய ஜீவியத்தில் முதல் நிபந்தனையாக இருக்கிறது. இதை தேவனுடைய வார்த்தை குறிப்பிடும்போது, "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது..... அவர் அடிமையின் ரூபமெடுத்து தம்மைத்தாமே..... தாழ்த்தினார்" என்றே கூறுகிறது (பிலிப்பியர் 2:5-8).


எத்தனையோ காரியங்களைக் குறித்து நாம் பெருமை கொண்டவர்களாய் இருந்திட முடியும். நம்முடைய தகுதியும், நாம் பெற்ற பிரபல்யமும் நமக்கு பெருமையைத் தந்துவிட முடியும். இயேசு இப்பூமியில் "பிரபல்யம்" (Popular) கொண்டவராய் இருந்தாரா? அவர் அசட்டை பண்ணப்பட்டவரும் மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவருமாயிருந்தார்" என்றல்லவா ஏசாயா 53:3 கூறுகிறது. ஆம், இப்பூமியில் நம் ஆண்டவர் இயேசு ஒருபோதும் 'பிரபல்யமான' மனிதராய் காணப்படவேயில்லை. அதைக்குறித்து ஆண்டவர் இயேசுவே குறிப்பிட்டுக் கூறும்போது, "எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய் பேசும்போது உங்களுக்கு ஐயோ!" என்றே கூறினார் (லூக்கா 6:26). நம் எஜமானனே அப்படியிருக்க, "சீஷன் எஜமானைக் காட்டிலும் மேலானவன் இல்லையே!". ஆகவே, நாம் பிரபல்யமாய் இருப்பதை நாடுவதற்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது.


இதைப்போலவே, நம்முடைய கல்வித் தகுதியை வைத்து நாம் பெருமை அடையலாம்! நம் அழகைக் குறித்து பெருமை அடையலாம்! நம் திறமையை எண்ணி பெருமை அடையலாம்! நம் மூதாதையரைக் குறித்து பெருமை அடையலாம்! இவை ஒன்றில்கூட இயேசுகிறிஸ்து பெருமை கொள்ளவில்லை என்பதை யோவான் 7:15, ஏசாயா 52:14, யோவான் 5:19, 30, மத்தேயு 1ம் அதிகாரம்.... ஆகிய வசனங்களில் வாசித்து அறியுங்கள்.     


நாம் கட்டிய வீட்டைக் குறித்துகூட நாம் பெருமையாக இருக்கலாம்! ஆனால், நம் எஜமானனோ "தலைசாய்க்க இடமில்லாதவராய்" இருந்தார் என்றல்லவா வேதம் கூறுகிறது. நம் ஆண்டவராகிய இயேசுவோ எல்லா மனிஷருக்கும் ஓர் அடிமையாய் அல்லவா இருந்தார்! மேஜையில் அமர்ந்திருப்பவர்களோ? பரிமாறுகிறவர்களோ? இவர்களில் யார் பெரியவன்? மேஜையில் அமர்ந்திருப்பவன் அல்லவா பெரியவன்! "ஆனால் நானோ உங்களிடம் பணிவிடை செய்கிறவனாகவே இருந்தேன்!" என்றே இயேசு கூறினார். ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த ராத்திரியில், மேல் அறையில், ஒரு சீலையை கட்டிக்கொண்டு தன் சீஷர்களின் கால்களை கழுவினாரே! இந்த இழிவான அடிமையின் வேலையை சிஷர்களில் ஒருவர்கூட செய்திடத் துணியவில்லையே!! இந்த குருவின் சிந்தையே நம் அனைவருக்கும் வேண்டும்!


ஜெபம்:

பரம பிதாவே! எங்கள் குருவாகிய இயேசுவின் தாழ்மைக்கு நாங்கள் வெகுதூரமாய் போய் நிற்கிறோம்! மனந்திரும்பி, தாழ்மையாய் வாழ கற்றுத்தாரும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


 எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments