இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 7
🔸️ நாம் தூய்மையான சாட்சியாய் வாழ்ந்திட வேண்டும்! 🔸️
"சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், .... எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்" (மல்கியா 1:11) என வாசிக்கிறோம்.
தரமும், தூய்மையுமே அல்லாமல், அளவும், எண்ணிக்கையும் தேவனுக்கு ஒருபோதும் பொருட்டல்ல! அளவு மனிதனைக் கவர்ச்சிக்கலாம்... ஆனால், தேவனோ அப்படி இல்லை!! சிருஷ்டிப்பு நமக்குப் போதிக்கும் சத்தியமும் இதுதான். பூமியானது, சிறிய கோளங்களில் ஒன்றாகவும், ஆகாயவிரிவில் உள்ள நட்சத்திரங்களை ஒப்பிடும்போது "கடுகு போன்ற" சிறிய அளவிலேயே பூமி இருக்கிறது. "இருப்பினும்" தேவன் மனிதர்களுடன் வாசம் பண்ணும்படி இந்த பூமிக்கே இறங்கி வந்தார்!!
இன்றும், உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள், தாவீது செய்ததுபோலத் (2 சாமு.24) தொகையிட்டு எண்ணிப்பார்த்து, அளவிலும் எண்ணிக்கையிலும் திருப்தி கொள்கிறார்கள்! எத்தனை பேர் மாறினார்கள்? என்ற கணக்கின்படியே ஒரு சுவிசேஷகனுடைய ஊழியத் திறமை இன்று நிதானிக்கப்படுகிறது! சபை மக்களின் அதிக எண்ணிக்கை, வரவு செலவு போன்ற அடிப்படையின் பேரிலேயே ஒரு சபையின் வளர்ச்சியும் இன்று கணிக்கப்படுகிறது!!
நாம் முதலில் வாசித்த வசனத்தில், மல்கியாவின் மூலமாகத் தன் இருதய வாஞ்சையைத் தேவன் வெளிப்படுத்தியதைப் பார்க்கிறோம். மல்கியாவின் நாட்களில் தேவன், இஸ்ரவேலின்மேல் குறைவுபட்டதெல்லாம், அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாய் இல்லை என்பதற்காய் அல்ல! அல்லது அவர்களின் காணிக்கை குறைவாய் இருக்கிறது என்பதற்காகவும் அல்ல! அவர்களுடைய "காணிக்கை அசுத்தமாக" இருந்தது என்பதற்காகவே ஆகும் (மல்கியா 1:6-10).
தேசத்தில் இன்றுள்ள கிறிஸ்தவர்களின் ஜனத்தொகை சதவீதம் குறைவாக உள்ளதே என்று, இன்றுள்ள சுவிசேஷம் அறிவிக்கும் கிறிஸ்தவர்கள் வருந்துவதோ அல்லது வருந்துவது போன்ற பாவனையோ செய்கின்றனர். "ஆனால்" தேவனோ, தங்களை விசுவாசி என்று அழைத்துக் கொள்பவர்களின் அசுத்த ஜீவியத்தைக் குறித்த மனபாரமே அல்லாமல், அதில் லட்சத்தில் ஒரு பகுதிகூட கிறிஸ்தவ ஜனத்தொகையின் எண்ணிக்கைக்காக தேவன் வருந்தியது இல்லை! பூமியின் "எல்லா இடங்களிலும்" தேவன் விரும்புவதெல்லாம் "சுத்தமான காணிக்கையே" (மல்கியா 1:11) ஆகும்!!
ஜெபம்:
அன்பின் பிதாவே! அளவை அல்ல, நீங்கள் தரத்தையே எங்களில் விரும்புகிறீர்; உம்முடைய வாஞ்சையின்படி, உமக்கு தூய்மையான சாட்சியாய் வாழ்ந்திட எங்களுக்கு கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
1 Comments
காட் பிளஸ் யூ பிரதர்
ReplyDelete