Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூலை 24

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூலை 24


🔸️ பிறரை நியாயம் தீர்க்காத வாழ்க்கை வேண்டும்! 🔸️


ஒரு சமயத்தில், விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு ஸ்திரீயை கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பரிசேயர்கள் கொண்டுவந்து குற்றம் சாட்டினார்கள். ஆனால், இயேசு அவர்களிடம் பேசியவுடன், ஒவ்வொருவராய் அவருடைய சமூகத்தைவிட்டு வெட்கத்துடன் பின்வாங்கிச் சென்றுவிட்டார்கள்! இவர்கள் ஏன் ஆண்டவருடைய சமூகத்தை விட்டு வெட்கத்துடன் பின்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது? ஏனென்றால், இயேசு அவர்களைப் பார்த்து "அவள் மீது கல்லெறியும் முதல் நபர் தனக்குள் பாவம் இல்லாதவனாக இருக்க வேண்டும்" எனக் கூறியதே ஆகும். அங்கு இயேசுவின் சமூகத்தில் பிரவாகித்த ஒளியில், தாங்கள் எந்த காரணத்திற்காக அந்த ஸ்திரீயைக் குற்றஞ்சாட்டினார்களோ, அவர்களே அக்குற்றத்திற்கு உரியவர்களாயிருந்ததை அந்த வேளையில் உடனடியாக உணர்ந்தார்கள்.  


ரோமர் 2:1-ல் "மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய்" என வாசிக்கிறோம். "நாம் பிறரை விரல் நீட்டிக் குற்றப்படுத்திய ஒவ்வொரு விஷயத்திலும் நாமே நம்முடைய வாழ்வில் குற்றமுள்ளவர்களாய் வாழ்ந்து இருப்பதை நியாயத்தீர்ப்பு நாளில் நாம் காண்போம்".


இவ்வாறு யாரெல்லாம் பிறரைக் குற்றப்படித்தியிருந்தார்களோ, அவர்களே கர்த்தருடைய நாளில் வெட்கத்துடன் பின்வாங்கி நிற்பார்கள்!! அநேக விசுவாசிகள் கூர்மையான கண்களை உடையவர்களாய், பிறருடைய சிறுசிறு செயல்களையும், வார்த்தைகளையும்கூட நியாயம் தீர்க்கிறார்கள். எப்போதுமே, ஒருவர் செய்யும் எவ்வளவு நல்ல செயலாக இருந்தாலும், அதிலும்கூட ஏதாகிலும் குறைவுகள் காணப்படத்தான் செய்யும்! ஏனென்றால், நாம் எல்லாருமே நன்மை ஏதும் இல்லாத ஒரு மாம்சத்தையே பெற்றிருக்கிறோம். அப்படியிருந்தும், குற்றம்சாட்டும் ஆவியை உடையவர்களோ ஒருநாளும் தங்களுடைய குறைகளைக் காணவே மாட்டார்கள்!


ஆண்டவருடைய வருகையில், அந்த பூரண வெளிச்சத்தில்தான் நாம் நம்முடைய சுயநலத்தையும், பெருமையையும் "முழு அளவில்" காண்போம் (கொரி 13:12). ஆனால், நாம் இப்பொழுதே அவைகளைத் தேவனுடைய வெளிச்சத்தில் "முழு அளவையும்" கண்டுவிட்டால்... நாம் ஒருவரையும் மீண்டுமாய் குறைகூறி குற்றம் சாட்டவே மாட்டோம்!! இவ்வாறு "எவ்வளவு அதிகமாய்" நம்முடைய அசுசிகளை நாம் காண்கிறோமோ, "அவ்வளவு குறைவாய்" பிறருடைய குறைகளை நாம் காண்போம்!   


ஜெபம்:

எங்கள் அன்பின் தகப்பனே! பிறருடைய குறைகளை குற்றமாய் காணாமல், எங்கள் குறைகளையே உமது வெளிச்சத்தில் அதிக அதிகமாய் கண்டு சுத்திகரித்து வாழ உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments