இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 27
🔸️ யாவரோடும் ஒப்புரவாகிட, 'சுயத்தின்' வலிமை சாகவேண்டும்! 🔸️
நம்மைப் பொறுத்தவரையில், நாம் யாவரோடும் சமாதானமாய் இருக்கவே நாட வேண்டும். ஒருவேளை நீங்கள் யாரேனும் தீமையாக பேசிவிட்டால், உடனடியாக அவரிடம் மன்னிப்புக் கேட்டு ஒப்புரவாக வேண்டும். இவ்வாறு செய்யும்படியே ஆண்டவராகிய இயேசுவும் கூறினார். "உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து" என இயேசு கூறினார் (மத்தேயு 5:25).
இங்கு ஆண்டவராகிய இயேசு குறிப்பிட்ட 'எதிராளி' தேவ வசனமேயாகும். நம்மோடு பேசும் தேவனுடைய வார்த்தைக்கு அல்லது மனசாட்சிக்கு கீழ்ப்படியாதிருக்கும்போது, அந்த தேவனுடைய வார்த்தை முடிவில் நமக்கே எதிராளியாக வந்து நிற்கும். "எதிராளியோடு வழியில் இருக்கும்போதே" என இயேசு குறிப்பிட்ட "வழியில் இருக்கும்போதே" என்பதற்குப் பொருள், இன்னமும் நாம் உயிரோடு இருக்கும்போதே என்பதேயாகும். இவ்வாறு தன் வழியிலேயே.... தன் ஜீவிய காலத்திலேயே, ஒப்புரவாகாத ஒருவனை, எதிராளியாய் மாறிய தேவ வார்த்தை முடிவில் நியாயாதிபதியாகிய தேவனிடத்தில் அவனை நியாயந்தீர்க்கும்படி ஒப்புக்கொடுத்துவிடும்.
இன்று தேவன் நம்முடைய தகப்பனாகவே இருக்கிறார்! ஆனால், இயேசுவின் வார்த்தைகளை மிகுந்த ஜாக்கிரதையாகக் கைக்கொள்ளாத ஒருவனுக்கு இந்த அன்புள்ள தகப்பன் ஒரு நாளில் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதியாக வந்து நியாயதண்டனை வழங்குவார்!! இதை இயேசு குறிப்பிடும்போது, "நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய்" (மத்தேயு 5:26) எனக் கூறினார். அதாவது, அந்த மனுஷனை, நியாயாதிபதி நித்திய ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துவிடுவார் என்பதே இவ்வசனத்தின் பொருளாகும்.
எனவே இருதயத்தில் "கோபம் கொள்ளும்" இவ்விஷயத்தை நாம் யாவரும் மிகவும் 'சீரியஸாக' எடுத்துக் கொள்வோமாக. இவ்வசனத்திற்கு அப்படியே கீழ்படிந்து தன் இருதயத்தில் நிதானமிழந்து கோபப்படாமலிருக்க வாஞ்சிக்கும் ஒருவன், தன் வலிமையான சுயத்திற்கு கண்டிப்பாய் மரித்திட வேண்டும்.
ஜெபம்:
எங்கள் அன்பின் தந்தையே! விரைந்து கோபமடைந்த நாங்கள் "வழியில் இருக்கும்போது" விரைந்து ஒப்புரவாகி எங்கள் சுயத்திற்கு மரித்திட கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments