இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 1
🔸️ பிதாவின் சித்தம் செய்வதே அவரை மகிழ்விக்கும் ஜீவியம்! 🔸️
நம்முடைய அன்றாட ஜீவியத்தில் நாம் தேவ சித்தம் செய்திட விரும்பினால் மாத்திரமே, இயேசுவை "ஆண்டவர்" என அழைத்திடவும் முடியும். ஒரு மனிதன் தன் மனதிலும், உணர்ச்சியிலும் தூண்டப்பட்டதால் அல்ல, மாறாக, அந்த மனிதன் தன் சித்தத்தை வளைந்து கொடுத்து, "ஆண்டவரே என் சித்தமல்ல, உம் சித்தமே என் வாழ்வில் செய்யப்படட்டும்" எனக் கூறும்பொழுதுதான் அந்த மனிதனுக்குள் உண்மையான மாற்றம் ஏற்படுகிறது. தன் ஆண்டவருக்கு முன்பாக இதே மனோபாவத்தை தொடர்ச்சியாகக் காத்துக்கொள்ளும் ஒருவனே தன் வாழ்வில் அதிகமதிகமாய் பரிசுத்தம் ஆகிவிடுவான்!
தன் ஜீவிய காலம் முழுவதும் "என் சித்தமல்ல, உம்முடைய சித்தமே ஆகக்கடவது" என இயேசு தன் பிதாவிடம் ஜெபித்தார் (யோவான் 6:38). தன் பிதாவை மகிழ்விப்பதற்கு இயேசு இவ்விதமாய் ஜீவிக்க அவசியமாயிருந்ததால், நாமும் பிதாவை மகிழ்விக்க இதைத்தவிர வேறு வழியே இல்லை! இந்த மனோபாவம் நம் ஜீவியத்தில் தொடர்ச்சியாக இல்லாவிட்டால், நாம் ஆண்டவரோடு இசைந்து நடப்பதில் ஒருக்காலும் வளர்ச்சி காணவே முடியாது.
நாமோ பல மணி நேரங்கள் ஜெபித்து, திரட்சியான வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டு, நூற்றுக்கணக்கான கூட்டங்களுக்கும் சென்றிருக்கலாம்! ஆனால், இவ்வாறு செய்த நாம், "பரமண்டலத்தில் உம்முடைய சித்தம் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் உம்முடைய சித்தம் (முதலாவது, நம்முடைய ஜீவியத்தில்) செய்யப்படுவதாக" என ஜெபிக்கும் ஸ்தானத்தை அடைந்திராவிட்டால், நம்முடைய நேரங்கள் எல்லாம் வீணாக்கிப்போட்ட பரிதாபத்திற்கே உள்ளாவோம்!! நாம் பெற்ற கிருபைகள் ஒவ்வொன்றும், நம் இருதயத்தின் ஆழத்திலிருந்து "பிதாவே என் சித்தமல்ல.... உம் சித்தமே செய்யப்படட்டும்" என்ற ஸ்தானத்திற்குள் நம்மை நடத்தியிருக்க வேண்டும். இங்குதான் உண்மையான பரிசுத்தத்தின் இரகசியம் அடங்கியிருக்கிறது.
'மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் போராடுகிறது' என கலாத்தியருக்குப் பவுல் எழுதினார் (கலா.5:17). மனுஷனுடைய சித்தத்திற்கும் தேவனுடைய சித்தத்திற்கும் இடையில் நிகழும் போராட்டத்தையே பவுல் இங்கே குறிப்பிட்டார்.
எனவே, என் சுய சித்தத்திற்கு 'இல்லை' என்றும் தேவனுக்கு 'ஆகட்டும்' என்றும் கூறி, என் சுயம் சாவதற்கு வழி ஏற்படுத்திவிடும் மார்க்கமே உண்மையான பரிசுத்தமாகுதலின் மார்க்கமாகும்.
ஜெபம்:
பரலோக பிதாவே! உம்மை "ஆண்டவராய்" கொண்டு உமது சித்தம் அல்லது உமது விருப்பம் மாத்திரமே செய்து, உமக்கு பிரியமாய் வாழ கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments