இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 27
🔸️ அக்கினிக்கு ஒப்புக்கொடுத்த பலி போன்றதே இயேசுவின் சிலுவை! 🔸️
தன்னைப் பின்பற்றியவர்களுக்கு ஆண்டவராகிய இயேசு பறைசாற்றிய "சிலுவையை" நாம் மெய்யாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறோமா? அப்படியானால், "நாம் மரிக்க வேண்டும்" என்ற செய்தியைத்தானே இந்த சிலுவை நமக்கு கற்பிக்கிறது! ஆம், கோதுமைமணி நிலத்தில் விழும்போது, அது பாதங்களுக்குக் கீழ் நசுக்கப்பட்டு... முடிவில், அதன் பளபளப்பான வெளித்தோல் கீறி உடைந்துவிடும்! இனியும் அந்த கோதுமைமணி அதற்குரிய சௌந்தரியமாய் இருப்பதில்லை!! இதைப் போலவே, தன் சிலுவையை எடுத்து இயேசுவின் பின்னே செல்லும் ஒரு விசுவாசியும், இந்த உலகத்திற்கு கவர்ச்சியாய் காணப்படுவதில்லை.... இந்த உலகம் அவனை அலட்சியப்படுத்திவிடும்! ஒருவேளை இந்த 'சிலுவைக்கு முன்பு' அவனிடம் காணப்பட்ட கவர்ச்சி அநேகமாய் இருக்கலாம். ஆனால், 'சிலுவைக்குப் பின்பு' அந்த சௌந்தரியம் இப்போது அவனிடம் இல்லை. தன் ஆண்டவரைப் போலவே, இப்போது அவன் மனிதர்களால் அலட்சியப்படுத்தப்பட்டு, தள்ளப்பட்டுப்போவான்!!
பழைய ஏற்பாட்டு நாட்களில், பலிபீடத்தில் வைக்கப்பட்ட பலியை அக்கினி எரித்து சாம்பலாக்கியதைப் போலவே, இப்போது 'கிறிஸ்துவின் சிலுவை' ஒரு மனிதனை மரணத்திற்கு கொண்டு வருகிறது!! தன் ஆண்டவருக்கு மெய்யான அர்ப்பணம் கொண்ட வாழ்க்கையின் பொருள் இதுதான்; இதில் எந்த அளவும் மாற்றமில்லை. இவ்வாறு தனக்கு அர்ப்பணமாகத் தந்த யாதொருவன் ஜீவியத்தையும், தேவ அக்கினி பட்சித்து... இனியும் அந்த ஆத்துமா தனக்காகவோ அல்லது உலகத்திற்காகவோ வாழாமல், தேவனுக்காக மாத்திரமே வாழும்படி இந்த அக்கினி செய்துவிடும்.
கலாத்தியர் 6:14 கூறுகிறபடி, அவன் இந்த உலகத்திற்கு மரித்திருப்பான்! இந்த உலகமும் அவனுக்கு மரித்திருக்கும்!! ஆனால், இன்றைய கிறிஸ்தவ உலகம் ஒரு மேலோட்டமான அர்ப்பணத்தை மாத்திரமே பேசுகிறபடியால், இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இருப்பினும் "ஒருவன் தன் சிலுவையை எடுக்கக் கடவன்" எனக் கூறிய இரட்சகரின் அழைப்பே மெய்யான அர்ப்பணமும் தேவனுக்குப் பிரியமுமாய் இருக்கிறது. பலிபீடத்தில் அக்கினி பட்சிக்காத எந்த அர்ப்பணமோ அல்லது பலியோ பழைய ஏற்பாட்டில் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படவேயில்லை!
அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக நம்மை அவருக்கு கொடுத்திருக்க முடியும்... ஆனால், நாம் மரிப்பதற்காக இந்த சிலுவையின் வழிக்கு நம்மை கொடுத்திருக்கிறோமா? இதுவே உத்தம கிறிஸ்துவம்!
ஜெபம்:
எங்கள் பரமபிதாவே! எங்களை முற்றிலும் தேவனுக்கு அக்கினி பலியாய் ஒப்புக் கொடுக்கும்படி ஆண்டவர் இயேசு காண்பித்த சிலுவையின் வழிக்கு எங்களை மனபூர்வமாக அர்பணிக்கிறோம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments