இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 13
🔸️ தேவனுக்கேற்ற நல்ல மனநோக்கம் வேண்டும்! 🔸️
நாம் வேதாகமத்தை எதற்காக வாசிக்கிறோம்? "அதன்மூலம் நமக்கு என்ன ஆசீர்வாதம் கிட்டும்?" என்ற ஒரே மனநோக்கமே திரளான கிறிஸ்தவர்களிடம் காணப்படுகிறது. இன்னும் சிலரிடம், தாங்கள் ஒரு 'வேத பண்டிதனாக வேண்டும்' என்ற வேட்கையும் அவர்கள் மனநோக்கத்தில் குந்தி நிற்கிறது! மிக சொற்பமானவர்களே, வேத வாக்கியத்தில் தேவனுடைய சித்தத்தை அறிந்து, பின்பு அதை நிறைவேற்றி தங்கள் ஜீவியத்தில் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு வேத வசனத்தை வாசிக்கிறார்கள்!!
நாம் எதற்காக ஜெபிக்கிறோம்? அதிகபட்சத்தில் "நமக்கென்ன விசேஷித்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி" ஜெபிக்கிறோம்! தேசத்தில் கர்த்தருடைய ஊழியம் செழித்து அவருடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்ற ஏக்கத்தோடு ஜெபிக்கும் விசுவாசிகள் மிக சொற்பமே இருக்கிறார்கள். நாம் உபாசித்துக்கூட ஜெபிக்கக்கூடும்!...
ஆனால், என்ன நோக்கத்திற்காக நாம் உபவாசிக்கிறோம் என என்றைக்காவது நம் நோக்கத்தை நாம் ஆராய்ந்ததுண்டா?
அவ்வாறு நம்மை நிதானித்திருந்தால், "நாம் விரும்பியவைகளைப்" பெற வேண்டும் என்ற நோக்கமே நமக்குள் பிரதானமாய் இருந்ததை நாம் கண்டுபிடித்திருக்க முடியும். ஒருவேளை நம்முடைய விருப்பம் "நான் பரிசுத்தாவியினால் நிரப்பப்பட வேண்டும்" என்ற ஆவிக்குரிய விருப்பமாகக்கூட இருக்கலாம். ஆனால் 'அந்த' விருப்பத்தின் மன நோக்கம்கூட "நான் கர்த்தரால் வல்லமையாய் உபயோகிக்கப்படவேண்டும்" என்ற சுய-நல நோக்கமே அல்லாமல்.... தேவன் யாரைக் கொண்டாகிலும் தம்முடைய ஊழியத்தை செழித்திடச் செய்ய வேண்டும் என்ற பரந்த நோக்கமாயில்லை!! நாம் நாடுவது நல்லதாகவே இருந்தாலும், அதில் காணும் சுயநலம் சுயநலமேயாகும்!!
நாம் எதற்காகப் பாடுகிறோம்? பாடல் வரம் பெற்ற அநேகர் "தனிப் பாடல்" (Solos) பாடுவதுண்டு. ஆனால், இவர்களில் எத்தனை பேர் நேர்மை உள்ளத்தோடு "நான் எனக்கென்று யாதொரு மகிமையையும் தேடாமல் ஆண்டவருடைய மகிமையை மாத்திரமே தேடினேன்!" எனக் கூறமுடியும்? நம் மனநோக்கங்கள் செம்மையாய் சீர்திருந்த மனம் திரும்புவோமாக!
ஜெபம்:
எங்கள் பரலோக தந்தையே! எங்கள் நல்ல ஆவிக்குரிய செயலிலும் சுய-நல மனநோக்கம் மண்டியுள்ளதே... தயவாய் தேவனுக்கேற்ற மனநோக்கம் எம்மில் தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments