இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 18
🔸️ வேதம் நமக்கு பெலன் தரும் தியானமாய் இருக்க வேண்டும்! 🔸️
எரேமியா 15:16, 1 பேதுரு 2:3 ஆகிய வசனங்களில் 'உணவிற்கு' அடையாளமாய் வேதவசனம் ஒப்பிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தீர்க்கதரிசி எசேக்கியேலும், அப்போஸ்தலனாகிய யோவானும் "ஒரு புத்தகத்தைப் புசித்தார்கள்" என்றே வேதாகமம் குறிப்பிடுகிறது. (எசேக்.3:1-3; வெளி.10:9,10). ஆம், தேவனுடைய மனிதர்கள் தேவனுடைய வார்த்தையைப் புசித்து ஜீரணம் செய்தார்கள்.
உணவுதான் நமக்கு பெலன் தருகிறது. ஆகவே உணவு இல்லாமல் நம்முடைய சரீரம் பெலனடைந்து பாதுகாக்கப்பட முடியாது. போதுமான உணவு இல்லாமல் எலும்பும் தோலுமாய் தன் சரீரத்தில் பெலஹீனமாய் இருக்கிறவன், நோயை எதிர்த்து நிற்கும் திறன் அற்றவனாகவே இருப்பான். இதைப்போலவே, தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்து புறக்கணிப்பவனும் தன் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி குன்றியவனாய் மாறி, அதன் நிமித்தம் சோதனையை எதிர்த்து நிற்பதற்கும் பிசாசின் தாக்குதல்களில் உறுதியாய் நிற்பதற்கும் திராணியற்ற பரிதாப நிலையில் இருப்பான்!!
அதே சமயம், நீங்கள் வேதாகமத்தை வாசித்துவிட்டதால் மாத்திரமே பெலன் கொண்டிருக்க முடியாது. மாறாக, நீங்கள் வேதாகமத்தைப் பிரியமுடன் வாசித்து, பின்பு அதை தியானித்து, அந்த வார்த்தைகள் உங்கள் இருதயத்தை ஊடுருவிச் செல்வதற்கு அனுமதித்து, அந்த இருதயத்தில் அவ்வசனங்கள் உங்களுக்கே சொந்தமாய் மாறிடவும் வேண்டும் (சங்கீதம் 119:11).
இதை யோபு கூறும்போது "கர்த்தாவே உம்முடைய வாயின் வார்த்தைகளை, எனக்கு வேண்டிய ஆகாரத்தை பார்க்கிலும் அதிகமாய் காத்துக் கொண்டேன்" (யோபு 23:12) என பரவசத்துடன் கூறினார். இவ்வித பெலன் கொண்டவனே சாத்தானுடைய கொடிய தாக்குதல்களை எதிர் நோக்குவதற்கு யோபுவைப் போல் தைரியம் கொண்டவனாய் இருப்பான். ஆகவேதான் யோபு அடைந்த பல துன்பங்கள் மத்தியிலும், தேவன் மீது அவன் கொண்டிருந்த விசுவாசத்தை இழக்கவேயில்லை! ஆனால் தன் கணவன் தேவனுடைய வார்த்தையில் கொண்டிருந்த அதே பற்றுதலை அவனுடைய மனைவி பெறாதபடியால், தனக்குத் துன்பம் நேர்ந்த அடுத்தகணமே அவள் தேவனை நிந்தித்து துவண்டுபோய் விட்டாள். ஆனால் யோபுவோ அப்படி இருக்கவில்லை.
இவ்வாறு தேவனுடைய வார்த்தையை நாள்தோறும் தியானித்து, பெற்றுக்கொள்வதினால் கிடைக்கும் பெலனைக் கொண்டு வாழ்வின் ஒவ்வொரு சோதனையையும் நாம் தைரியமாய் எதிர்த்து நின்றுவிட முடியும் என்பதற்கு யோபு ஒரு நல்ல மாதிரியாய் நம் யாவருக்கும் திகழ்கிறார்!!
ஜெபம்:
பரம தகப்பனே! எங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உம் வசனமே எங்களின் ஆன்ம உணவாய் இருக்கிறதே! உம் வசனம் எங்கள் தினசரி தியானமாய் மாறிட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments