இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 17
🔸️ தேவன் நம் மீது வைத்த மாறாத அன்பு! 🔸️
ஒருசமயம் கர்த்தருடைய ஊழியர் ஒருவர் தன் சபையில் உள்ள ஒரு ஏழை விதவை, வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதை அறிந்தார். அவளுடைய வாடகை முழுபாக்கிக்கும் போதுமான பணத்தை அன்பளிப்பாக எடுத்துக்கொண்டு அவள் வீட்டிற்குச் சென்றார். அவள் வீட்டின் கதவை பலமுறை தட்டிப் பார்த்தும் கதவு திறக்கவில்லை. அதிக நேரமாய் நின்று கதவைத் தட்டிய ஊழியர் பதில் ஏதும் வராததால், அங்கிருந்து சென்றுவிட்டார்!! சில நாட்கள் கழித்து அந்த ஏழை விதவையை ஒரு வீதியில் சந்தித்தார். "சகோதரி, உங்கள் வாடகைக்கு போதுமான பணத்தை அன்பளிப்பாக நான் உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்தேன். ஆனால் உங்கள் வீடு பூட்டியிருந்தது. கதவைத் தட்டியும் ஒருவரும் திறக்கவில்லை" என்று கூறினார். அதற்கு அந்த சகோதரி, "அப்படியா, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்! நீங்கள் கதவைத் தட்டிய அதேசமயத்தில் நான் வீட்டிற்குள்தான் இருந்தேன். வீட்டுச் சொந்தக்காரர் வாடகை பாக்கியை வாங்க வந்து விட்டாரோ என்று அஞ்சியே நான் கதவை திறக்காமல் இருந்துவிட்டேன்" எனக் கூறினாள்.
பார்த்தீர்களா, வாடகையை வசூலிப்பற்காக நம்மிடத்தில் ஆண்டவர் வரவில்லை, தன்னிடமுள்ள யாவற்றையும் நமக்கு கொடுப்பதற்கே அவர் வந்தார். அப்படியிருக்க அவருக்கு கதவை திறக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய மதியீனம்! அதைவிட பெரிய மதியீனம், நம் முழு ஜீவியத்தையும் அவருக்கே சம்பூர்ணமாய் இன்னமும் அற்பணிகாமல் இருப்பதுதான்!!
தேவனுடைய இந்த அன்பின் சுபாவம் ஒருக்காலும் மாறிப் போவதில்லை. இஸ்ரவேல் தேசத்தின் சரித்திர நிகழ்ச்சிகள் அனைத்திலும் "அவர்கள்மீது அவர் கொண்ட மாறாத அன்பினை" இஸ்ரவேலர்கள் அறிந்து கொள்ளும்படிக்கே தேவன் பிரயாசப்பட்டார். ஏனென்றால் வேதம் கூறுகிறபடி, "அநாதி சிநேகத்தால் உங்களை நான் சிநேகித்தேன்" என்றே தேவன் அவர்களிடம் கூறி இருந்தார் (எரேமியா 31:3 உபாகமம் 4:37).
இத்தனை ஆச்சரியமான அவருடைய மாறாத அன்பிற்கு ஈடாய் நம்மிடமிருந்து அவர் எதிர்பார்ப்பதெல்லாம் "நம்முடைய அன்பு மாத்திரமே" ஆகும்! (உபாகமம் 6:5).
ஜெபம்:
அன்பின் தகப்பனே! உமது அன்பை நாங்கள் எக்காலத்திலும் சந்தேகப்பட்டுவிடாதபடி உம் அன்பில் நிலைத்திருக்க கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments