இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 20
🔸️ சூழ்நிலைகளில் தேவனையே காண வேண்டும்! 🔸️
கன்னானாகிய (Copper Smith - தாமிரக் கொல்லன்) அலெக்சந்தரைப்பற்றி பவுல் கூறியதுபோலவே, நம் எதிரிகளுக்கு அவர்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாக "கர்த்தரே" பலனளிப்பார்! (2தீமோ.4:14). ஆகவே, இதுபோன்ற பழிவாங்குவதற்குரிய விஷயங்களை கர்த்தரிடம் ஒப்புக்கொடுத்துவிடுவதே நமக்கு மிகுந்த பாதுகாப்பானதாகும் (ரோமர் 12:19).
ஆம், எந்த விஷயங்களையும் தேவனிடம் ஒப்புக்கொடுப்பதே மேன்மையான வாழ்க்கையாகும். ஏனெனில், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ, அதை அவர் நன்கு அறிவார்! "சகலமும்" அவருடைய அதிகாரத்திற்கே உட்பட்டிருக்கிறது! நல்லதொரு சிற்பியாய், நம்மில் இயேசுவை வடிவமைப்பதற்காக அவரே பாறையை நேர்த்தியாய் செதுக்கிக் கொண்டிருக்கிறார். பாறையின் "சில பகுதிகள்" கடினமானதாய் இருக்கிறபடியால், அவைகளைச் செதுக்குவதற்கு, இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளையும், எதிர்ப்புகளையும் அவர் உபயோகிக்க வேண்டியதாயிருக்கிறது. இவ்வாறு அவருடைய செதுக்குதலுக்கு நாம் அடங்கியிருந்தால்.... முடிவில், கிறிஸ்துவுக்கு ஒப்பான மனிதர்களாய் நாம் வடிவம் பெற்று, ஆவிக்குரிய அதிகாரத்தையும் பெற்றிட முடியும்!!
தான் நடத்தப்பட்ட ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் இயேசு தன் பிதாவின் கரத்தைத் தெளிவாய் கண்டபடியால், தன்னைக் காட்டிக் கொடுத்த யூதாஸையும் "சினேகிதனே!" என அவரால் அழைக்க முடிந்தது! இவ்வாறு நம் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுடைய சர்வவல்லமையுள்ள ஆளுகையை நாமும் காண முடிந்தால், அச்சூழ்நிலைகளில் நம்மை நாமே தாழ்த்துவது நமக்கும் எளிதாய் மாறிவிடுமே!! இதனிமித்தம், ஏற்ற சமயத்தில் நம்மை உயர்த்துவதும் தேவனுக்கு மிக எளிதாய் இருக்கும்!!
ஆம், நம் தோளின்மீது விழுந்த அழுத்தங்களை 'எப்போது' அகற்றி, அதே தோளின்மீது தன் அதிகாரத்தையும் 'எப்போது' தரவேண்டும் என்ற 'ஏற்ற வேளையை" தேவனே அறிந்திருக்கிறார். எனவேதான், நாம் அவருக்காகவே காத்திருக்க வேண்டும்! இவ்வாறு கர்த்தருக்காக காத்திருக்கிற ஒருவர்கூட ஏமாற்றம் அடைந்ததோ அல்லது வெட்கம் அடைந்ததோ இல்லவே இல்லை! (ஏசாயா 49:23).
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! வாழ்வின் சூழ்நிலைகளில் நாங்களாக யாதொன்றிலும் பிரதிபலித்துவிடாமல் உம்முடைய ஆளுகையை விசுவாசித்து, நீரே கிரியை செய்யும்படி நாங்கள் அமர்ந்திருக்க கிருபை தாரும்;
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments