இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 23
🔸️ பாவத்தையும் உலகத்தையும் வேறுபிரிக்கும் சிலுவை! 🔸️
நம்மில் சிலர் மாத்திரமே "சிலுவை சுமப்பதின் மெய்யான தாற்பரியத்தை" தெளிவாக விளங்கிக் கொண்டவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் நம்மிடையே உள்ள திரளானோர் "வாழ்க்கையின் பாரங்களையே" தங்கள் சிலுவைகளாக ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் "சரீர சுகவீனங்களை" சிலுவைகளாக காண்கின்றனர். இன்னும் சிலர் அடங்கி வாழாத "தன் மனைவியையும்", அன்பற்ற "தங்கள் புருஷர்களையும்" அல்லது கீழ்ப்படியாத தங்கள் "பிள்ளைகளையும்" 'சிலுவைகள்' என உருவகப்படுத்துகிறார்கள்.
சிலுவையின் தாற்பரியம் தங்க டாலரில் இல்லை! சிலுவை கல்வெட்டுகளில் இல்லை! ....அதுபோலவே, மேற்கண்டபடி ஜனங்கள் எண்ணுகின்ற அனைத்தும் சிலுவை அல்லவே அல்ல! அதாவது "ஒருவன் தன் சிலுவையை எடுக்கக்கடவன்" என இயேசு குறிப்பிட்ட சிலுவை, இவை யாதொன்றும் இல்லை!
இன்றைய சபைகள் கிறிஸ்துவின் சிலுவையை ஓர் மார்க்க அடையாளமாக அழகூட்டி வைத்திருக்கிறபடியால், இயேசு மெய்யாகவே கூறிய சிலுவைக்குப் பதிலாய் தவறான கருத்தையே தங்கள் உள்ளத்தில் பெற்றிருக்கிறார்கள்.
இப்பூமியில் இயேசு வாழ்ந்த காலத்தில் சிலுவையானது "மரணத்திற்குரிய ஓர் ஆயுதமாகவும், ஒரு பெருத்த அவமானத்திற்குரிய ஆயுதமாகவும்" கருதப்பட்டது! அந்நாட்களில் நீங்கள் எருசலேமில் வாழ்ந்து வந்தால், அந்த வீதியில் ஒரு மனிதன் சிலுவை சுமந்து செல்ல, அவனைச்சூழ ரோம வீரர்கள் சென்று கொண்டிருக்க நீங்கள் காணும்போது, அவன் எங்கே சென்று கொண்டிருக்கிறான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் அறிந்திருப்பீர்கள். ஆம், மரணமடையும் இடத்திற்கே அவன் சென்று கொண்டிருக்கிறான்! தன் உறவினர்கள், நண்பர்களாகிய அனைவரிடமிருந்தும், பாவத்திடருந்தும், விடைபெற்று, இனி ஒருபோதும் திரும்பி வராத பாதையில் சென்று கொண்டிருக்கிறான்!! இவ்வுலகத்திற்கே அவன் "குட்-பை" சொல்லிவிட்டு, இந்த உலகத்தைவிட்டே நிரந்தரமாய் பிரியப் போகிறான். இவ்வுலகில் அவன் கொண்டிருந்த உடமைகள் யாதொன்றையும் இனி அவன் மீண்டும் காணமாட்டான்! அது மாத்திரமல்லாமல், அவன் உலகத்தை விட்டு செல்லும் அந்த வழியானது மகா நிந்தையும் அவமானமும் கொண்ட வழியாகும்.
சிலுவையின் மரணமானது பகிரங்க அவமானத்திற்குரிய மரணமாகும்! ஒரு சமயம் பணக்கார வாலிபன் ஒருவன் தன்னை பின்பற்றும்படி இயேசு எடுத்துவரச் சொன்ன சிலுவையில் இவையாவும் அடங்கும்! (மாற்கு 10:17-22).
'பின்பற்றுவதின் பொருள்' சிலுவையில் அறையப்படும்படி எருசலேம் வீதியில் சென்ற இயேசுவின் பாதையில் நாமும் செல்வதே ஆகும்!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! எங்களை பாவத்திலிருந்தும், உலகத்திலிருந்தும் நிரந்தரமாய் பிரித்து, நித்திய ஜீவனை வழங்கும் "சிலுவை" எங்கள் வாழ்வின் தினசரி பங்காய் மாறுவதாக! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments