இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 24
🔸️ இந்த பூமிக்கு நாம் அந்நியர்கள்! 🔸️
ஓர் அந்நியராகவே இவ்வுலகில் நாம் இருக்கிறோம். கடலின் நடுவிலிருக்கும் ஒரு கப்பல் கடல் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அந்த 'உப்பு நீர்' கப்பலுக்குள் ஊடுருவி வருவதில்லை. இதைப் போலவே ஒரு விசுவாசி இந்த உலகத்தில் வேறுபிரிந்து வாழத் தொடங்கிவிட்டால், அவன் இந்த உலகத்தில் பரியாசத்தையும் எதிர்ப்பையும் வெகு சீக்கிரத்தில் சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும்! மிக சொற்ப காலத்தில் இந்த உலகம் அவன் வாழ்வதற்கு அசௌகரியமுள்ள இடமாய் மாறிவிடும்! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தன்னை பின்பற்றி வந்த சீஷர்களுக்கு இவ்வுலகத்தால் உண்டாகும் உபத்திரவங்கள் தவிர்க்க முடியாததாய் இருக்கும் என்ற உண்மையை முன்கூட்டியே கூறி எச்சரித்தார்! (யோவான் 16:33).
ஒரு கிறிஸ்தவனுக்கு பரலோகம்தான் உண்மையான சொந்தமாய் இருந்தால், இந்த பூலோகம் அவனுக்கு உரியதாய் இராது என்ற உண்மையை நாம் இயற்கையாகவே விளங்கிக்கொள்ள முடியும். அவன் தண்ணீரிலிருந்து வெளியே போடப்பட்ட ஒரு மீன்! ஆகவே இந்த பூமியில் அவன் வாழ்ந்திட கஷ்டங்களையும் துன்பங்களையும் சகிக்க வேண்டியதை அறிந்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! ஒரு மீனை தரையில் உயிருடன் பாதுகாப்பதற்கு ஓர் அற்புதம் நிகழ வேண்டும்! அதுபோலவே, கிறிஸ்துவின் மெய்யான சபை இந்த பூமியில் நிலைத்திருப்பதற்கும் 'அந்த மீனுக்கு' நிகழ்ந்த அற்புதமே அவசியமாயிருக்கிறது! ஆம், நம் கிறிஸ்தவ ஜீவியம் இவ்வாறு இருந்திடவே தேவன் விரும்புகிறார். அதாவது, தேவனுடைய அற்புத கிரியையின் வல்லமையை ஒவ்வொரு நாளும் சார்ந்து வாழும் ஒரு வாழ்க்கை!
அவருடைய ஜனத்திற்கும், இந்த உலகத்தின் ஆவிக்கும் நடுவே ஒரு பெரும் "பிளவு"
நிரந்தரமாய் இருந்திடவே தேவன் விரும்புகிறார். அந்தப் பிளவின் ஆழமும் அகலமும் பரலோகத்தையும் நரகத்தையும் பிரிக்கும் அளவிற்கு இருந்திட வேண்டும். . . அதாவது, அங்கிருந்து ஒருவரும் இங்கு வரவோ இங்கிருந்து ஒருவரும் அங்கு செல்லவோ கூடாத அளவிற்கு உள்ள பிளவு! (லூக்கா 16:26).
பார்த்தீர்களா! இந்த உலகத்தின் ஆவியிலிருந்து நாம் முற்றிலும் விடுபட வேண்டும் என்பதே தேவனுடைய தீராத வாஞ்சையாய் இருக்கிறது!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! ஒரு மீனுக்கு "தரை" அந்நியமாய் இருப்பதுபோலவே, நாங்கள் இந்த உலகத்திற்கு அந்நியர்களாய் வாழ்ந்து உம்மை பிரியப்படுத்திட உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments