இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 25
🔸️ உலகத்திற்கு அல்ல, கிறிஸ்துவுக்கே நாம் பைத்தியமாக வேண்டும்! 🔸️
"நான் கிறிஸ்துவின் நிமித்தம் பைத்தியக்காரன்" என பவுல் தன்னை அழைத்துக் கொண்டார் (1 கொரிந்தியர் 4:10). இவ்வுலகில் 'டாக்டர்' 'இன்ஜினியர்' பட்டத்தைவிட 'கிறிஸ்துவின் பைத்தியக்காரன்' என்ற பட்டம் மிகவும் சாலச் சிறந்ததேயாகும். ஆம், பவுல் சென்ற இடமெல்லாம் "பைத்தியக்காரன்" என்ற பட்டம் சூட்டியே ஜனங்கள் அவரை புறக்கணித்தார்கள். ஆனால், அது ஒன்றும் அவரை மனம் மடியச் செய்யவில்லை. ஏனென்றால், தன் குருவைப்போலவே அவர் இந்த உலகத்திற்கு ஏற்கனவே மரித்துவிட்டார்.
ஒரு பட்டணத்தில் வசித்த ஒரு சகோதரன் தன் ஆண்டவருக்கு சாட்சி பகரும் பொருட்டு தன் மேலாடையின் முன்னும் பின்னும் வசன அட்டைகளைத் தொங்கவிட்டு வீதிகளில் செல்வார். இதனிமித்தமாய் அந்தப் பட்டணத்தின் பல இடங்களிலும் இவர் கேலிக்குரியவராய் மாறினார். சில வருடங்களுக்குப் பிறகு, வசனங்களுக்குப் பதிலாய் தன் ஆடையின் முன்பகுதியில் "நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன்" என்ற வாக்கியத்தை பெரிதாக எழுதியிருந்தார். தன் முதுகுப்புற அட்டையிலோ "நீங்கள் யாருக்கு பைத்தியம்?" என்ற வாசகத்தைப் பெரிதாக எழுதியிருந்தார்! இப்போது, அவரைக் கேலி செய்தவர்கள், இந்தக் கேள்விக்கு பதில் தரமுடியாமல் வெட்கத்தால் தலை குனிந்தார்கள்!!
ஆம், கிறிஸ்துவுக்கு பைத்தியமாய் இருந்திட நமக்கு விருப்பமில்லை என்றால், "பிசாசுக்கே பைத்தியமாய் மாறுவோம்!" என்ற உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? சிலுவையை ஏற்றுக் கொள்வதன் பொருள் "இந்த உலகத்திற்கு மரிக்கும் ஸ்தானத்தை" ஏற்றுக் கொள்வதேயாகும். இதனிமித்தம், உலகம் நம்மைப் புகழ்வதோ அல்லது இகழ்வதோ ஒரு பொருட்டாய் நமக்கு இருப்பதில்லை. "இந்த ஒன்றில் குறைவுபடுவதே" இன்றைய திரளான இளைஞர்கள் கர்த்தருக்கு வல்லமையாய் செய்திட வேண்டிய ஊழியத்தை பெலன் இழக்கச் செய்திருக்கிறது. நமக்கு ஏராளமான உயர் கல்வித் தகுதிகள் இருக்கலாம், ஏராளமான வரங்களும் தாலந்துகளும் இருக்கலாம். ஆனால் "இந்த ஒன்று குறைவுபட்டால்" நாம் பெற்றிருக்கும் அனைத்து தகுதிகளும் கர்த்தருடைய ஊழியத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் போய்விடும்!!
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! உம்மை எங்களைவிட்டு பிரிக்கும் உலகத்திற்கு பின்னால் பைத்தியமாய் திரியாதபடி, உமக்கே எங்களை சொந்தமாய் கொண்டீரே! தேவையான இப்பகுதியில் குறைவுபட்டுவிடாதிருக்க கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments