இன்று "அவருடைய" சத்தம்
அக்டோபர் 1
🔸️ "கண்ணிற்கு" ஒப்பான நம் மனசாட்சி! 🔸️
மத்தேயு 6:22, 23-ம் வசனத்தில் "கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்" என இயேசு கூறினார். நமக்குள் இருக்கும் மனசாட்சியையே இயேசு "கண்" எனக் கூறினார். நம்முடைய சரீரத்திற்குரிய கண்ணில் ஏதேனும் தூசி விழுந்து விட்டால், நம்முடைய எல்லா முக்கியமான வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு தூசி எடுப்பதற்கு நாம் யாவருமே பிரயாசப்படுவது உண்டு. 'ஒரு தூசிகூட' நம் கண்ணில் தங்கிவிட்டால் நம் கண் குருடாக வாய்ப்புண்டு! எனவே தேவன் நம் கண்ணைக் கழுவுவதற்கு இயற்கையாகவே கண்ணின் மேல்பகுதியில் 'கண்ணீர்' என்ற திரவம் கண்ணை தொடர்ச்சியாய் கழுவும்படி சிருஷ்டித்திருக்கிறார். இக்கண்ணைப் போலவே நம்முடைய மனசாட்சியைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று இயேசு வலியுறுத்தினார்.
எனக்கும் தேவனுக்கும் இடையில் யாதொரு குறையும் என் கண்ணில் (மனசாட்சியில்) தூசியாகப் படிந்திட அனுமதிக்கவே கூடாது. அப்படி ஏதாகிலும் குறை எனக்குள் ஏற்படுமென்றால், அவைகளை உடனே அறிக்கை செய்து விட்டுவிட்டு, மனந்திரும்பிவிட வேண்டும். இல்லாவிட்டால், அக்குறைகள் என் கண்ணில் தூசியாக படிந்து என்னை ஆவிக்குரிய குருடனாக மாற்றிவிடும்!
இன்று அநேக விசுவாசிகள் தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக எத்தனையோ காரியங்கள் செய்தாலும் அவர்களுடைய மனசாட்சி அவர்களை ஏதும் செய்யாதது போலவே காணப்படுகிறார்கள். இது எதைக் காட்டுகிறது என்றால், இவர்கள் மனசாட்சி தேவனுடைய வார்த்தையின் தரத்தின் அளவிற்கு பழக்குவிக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. நாம் தேவனுடைய வார்த்தையின் தரத்திற்கு ஒப்பாய் நம்முடைய மனசாட்சியை பழக்குவித்தவர்களாய் இருக்க வேண்டும்.
உதாரணமாய், யாக்கோபு 4:11 வசனத்தில் "சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருங்கள்" எனக் கூறினார். சிலருடைய மனசாட்சி, சகோதரருக்கு எதிராய் விரோதம் பேசும்போதே அவர்களை உறுத்துவதாயிருக்கும். இவ்வாறு, மனசாட்சியை தேவனுடைய வார்த்தையின் தரத்திற்கு ஒப்பாய் பழக்குவித்துக் கொண்டவர்களுக்கே, "உங்கள் இருதயத்தில் கசப்பான வைராக்கியத்தைக்கூட" வைக்காதிருங்கள்" (யாக்கோபு 3:14) என புத்தி கூறினார். ஆகவே நாம் எந்த அளவிற்கு நம்முடைய மனசாட்சியில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே முக்கியமாகும்.
ஜெபம்:
எங்கள் பரலோக தந்தையே! 'சிறிய தூசி கூட' எங்கள் கண்களை உறுத்துவதுபோல, உம் வேத வசனத்தின் தரத்தில் வளர்ந்து எங்கள் மனசாட்சி அதற்கேற்ப பயிற்சி பெற கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments