Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

அக்டோபர் 05

 இன்று "அவருடைய" சத்தம்


அக்டோபர் 5


🔸️ உலக ஆவிக்கு சிறைபடாது வாழ வேண்டும்! 🔸️


தூய்மையான பக்தியே தேவனுடைய பரிபூரண சித்தமும், அவருடைய பார்வைக்கு மகிழ்ச்சியும் நிறைந்ததாகும். இந்த பக்திக்கு களங்கம் விளைவிக்கும் "இப்படியிருந்தால்...." அல்லது "சரிதான், ஆனாலும்..." ஆகிய தடங்கல் வார்த்தைகளுக்கு இடமே இல்லை! "இந்த உலகத்தோடு நீங்கள் ஒத்த வேஷம் தரிக்கலாகாது" (ரோமர் 12:2). அவ்வளவுதான், இது அழியாத தேவனுடைய வார்த்தை. அதாவது, இந்த புத்திமதிக்கு நீங்கள் "முற்றுப்புள்ளி" வைத்திட வேண்டும்!


இந்த உலகம், என்னென்னவோ ஜாலங்கள் செய்கிறது! 'நீ ஏன் உலகத்தின் ஆவிக்குள் கொஞ்சம் கைகோர்க்கக் கூடாது' என்பதற்கு பல்வேறு காரண யுக்திகளை வாரி வழங்குகிறது. கவனம்... இதுதான் உலகத்தின் ஆவி! வஞ்சிக்கப்படுபவன் இந்த ஆவிக்கு பலியாகிவிடுவான். இந்த உலகம் உங்களுக்கு கற்றுக்கொடுக்க விரும்புவதெல்லாம், "எங்களைப் போலவே வாலாகவே இருந்து விடு" என்ற அழைப்புதான். ஆனால், சத்திய வேதம் ஓங்காரமிடும் அழைப்பெல்லாம் "நீ தலையாகவே இருந்துவிடு!" என்ற அழைப்புதான்!! (உபாகமம் 28:14).


வேத வாக்கியங்கள் என வரும்போது, 'ஒரு தனிப்பட்ட சுயாதீன சுதந்திர வாழ்க்கையை' கைக்கொண்டு அனைத்து வேத வாக்கியங்களுக்கும் அப்படியே கீழ்ப்படிந்துவிடுங்கள். ஏனெனில், வேத வாக்கியங்கள் அனைத்தும் பழுதற்றதும் பூரணமுள்ளதும் ஆகும். பூரணமான வேத வசனத்தை ஒரு மனுஷன் கொச்சைப்படுத்திவிடக்கூடாது. நீங்கள் நடந்துவரும் ஜீவிய பாதை "பழுதற்ற" வேத வாக்கியத்தின்படியான கீழ்படிதலுள்ள ஜீவியம்தானா? என்பதை அடிக்கடி சோதித்துப் பாருங்கள்!


இன்று, மனந்திரும்பி தங்களை சீஷர்கள் என அழைத்துக்கொள்ளும் ஜனங்கள்கூட உலகத்தின் அனுசாரங்களையும், அதின் வழிமுறைகளையும், அது கற்றுக்கொடுத்த பாரம்பரியங்களையும்... ஏதோ, தேவனுடைய வசனத்திற்கும், தேவனுடைய இஷ்டத்திற்கும் நடுங்கி கீழ்ப்படிவதைப்போல, இந்த சீரழிந்த உலக அனுசாரங்களுக்கு அத்தனை உண்மையுள்ளவர்களாக நடக்கத் துவங்கிவிட்டார்கள்! இவர்கள் வேத வாக்கியங்களுக்கு கொண்டுவரும் அவமதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல!! நாமோ, உலக ஆவிக்கு சிறைபடாது வாழ கவனம் கொள்ள வேண்டும்!   


ஜெபம்:

எங்கள் பரலோக பிதாவே! உம்மீது நாங்கள் கொண்ட பக்தியில் சிறிதேனும் 'களங்கம்' இந்த உலகத்தால் உண்டாகாதிருக்க கிருபை தாரும்! 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments