இன்று "அவருடைய" சத்தம்
அக்டோபர் 9
🔸️ நமது தேவன் சர்வ வல்ல தேவன்! 🔸️
எந்த மனிதனும் தீர்க்க முடியாத 'இமயம்' போன்ற பிரச்சனைகள் மத்தியிலும் தன்னுடைய ஜனங்கள் தன்மீது நம்பிக்கையாய் இருப்பதைக் காண்பதில் தேவன் மகிழ்ச்சியடைகிறார்! இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் "ஒரு சர்வ வல்ல தேவனை நான் விசுவாசிக்கிறேன்" என்ற நம்முடைய விசுவாசத்தை நிரூபிக்கிறோம். ஆனால், இன்று அநேக கர்த்தருடைய ஜனங்கள் தங்கள் 'சொந்த கற்பனைக்குள் அடங்கும்' ஒரு தேவனையே விசுவாசிக்கிறபடியால் மனுஷர் மூலமாகவோ அல்லது பிசாசு மூலமாகவோ உருவாகும் புயல்களையும், மலைகளையும் சந்திக்கும்போது, "இவர்களின் தேவன்" உதவி செய்திட சத்துவமற்றவராய் இருக்கிறார். இந்த தேவன் வேதாகமம் உயர்த்திக்காட்டும் "நம்முடைய தேவன்" அல்ல! ஆம், தங்கள் சொந்த கற்பனையில் இவர்களே உருவாக்கி வைத்திருக்கும் "ஒரு தேவன்!" இது, புறஜாதிகள் வைத்திருக்கும் சிலையைக் காட்டிலும் மேலானதொன்றும் அல்ல!
எந்தப் பிரச்சனையாகிலும் "இது மிகப்பெரிய பிரச்சனை" என நம்முடைய தேவனுக்கு உண்டோ? இல்லவே இல்லை! அவ்வாறு இருக்க, மனிதர்களோ அல்லது பிசாசுகளோ நமக்கு முன்பாக தோன்றச் செய்யும் மலைகளுக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்? கானான் தேசத்திலிருந்த அரக்கர்களின் உருவத்தைப் பற்றி இஸ்ரவேலர்கள் கேள்விப்பட்டவுடன் "இது போன்ற அரக்கர்களை எல்லாம் கையாளுவது எங்கள் தேவனுக்கு கடினம்!" என சிந்திக்கத் தொடங்கினார்கள். யார் இவர்களுடைய தேவன்? இவர்களை எகிப்திலிருந்து விடுதலை செய்தாரே, அந்த தேவனா? இல்லை, இவர்கள் தங்களுடைய 'கற்பனையில்' கொண்டிருந்த ஒரு சத்துவமற்ற தேவனே இவர்களுடைய தேவனாகும். ஆம், இப்படிப்பட்டவர்களை வனாந்தரத்தில் 40 வருடங்கள் அலையும்படி தேவன் தந்த தண்டனை நமக்கு ஒன்றும் ஆச்சரியமாய் இல்லை. இந்த இஸ்ரவேலர்கள் அவிசுவாசம் கொண்டிருந்தார்கள்.
இவர்களுடைய அவிசுவாசம் தேவனை நிந்தித்து, அவர்களுக்காக எந்த கிரியையும் அவர் செய்ய முடியாதபடி அவருடைய கரத்தைக் கட்டிப்போட்டுவிட்டது. இன்றைக்கும் தங்களுடைய அவிசுவாசத்தினால் தேவனுடைய கரத்தைக் கட்டிப்போடும் கிறிஸ்தவர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்!!
ஆனால் தேவனோ இன்று யோசுவா, காலேப் போன்ற மனிதர்களையே நோக்கிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், இவர்களே "தேவனால் கூடாதது ஒன்றுமில்லை" என விசுவாசித்து, அதைப் பெருமகிழ்ச்சியுடன் பிரகடனம் செய்கிறவர்கள்!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! எத்தனை பிரச்சனைகள் ஆனாலும், அதை தீர்த்து வைத்திடும் உமது சர்வ வல்லமையை விசுவாசித்திடும் நல்ல இருதயம் எங்களுக்குத் தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments