இன்று "அவருடைய" சத்தம்
அக்டோபர் 14
🔸️ தேவனோடு தனித்திருக்க நாடுங்கள்! 🔸️
ஆண்டவராகிய இயேசுவைக் குறித்து, "அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம் பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனியாக இருந்தார்" என மத்தேயு 14:23-ம் வசனம் எடுத்துரைக்கிறது. ஆனால், இன்றைய நாகரீக உலகத்தில், தியான வாழ்க்கையை கைக்கொள்வது அதிக கடினமாய் மாறிவருகிறது! ஏராளமான வேலைகள் மற்றும் நம்மை ஆட்கொண்ட ஏராளமான சிந்தனைகள் நம்மை அடித்து வீழ்த்தி "தேவனோடு கொண்டிருக்க வேண்டிய நமது தனிமையான உறவை" அழித்துப் போடுகிறது! நமக்கு நிஜமாய் நடந்திருக்க வேண்டியதெல்லாம், இந்த உலகத்தை நாம் சந்திப்பதற்கு முன்பாக "முதலாவது" தேவனிடம் சென்று அவரது வல்லமையைப் பருகி அதன் மூலமாய் நாம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதேயாகும்.
"ஒரு ஞானம் உள்ள ஆத்துமா தனிமையில் ஓய்ந்திருக்கும்" என்றே தியான நேரத்தைக் குறித்து ஒரு பக்தன் குறிப்பிட்டு எழுதினார். ஆனால், நாம் ஓய்ந்திருக்கும்படியான "தனிமை" எங்கேயிருக்கிறது? இன்றைய விஞ்ஞானம், மனிதனுக்கு உலக சொகுசுகளை வழங்கி, இந்த உலகத்தை தழுவிக் கொள்ளாமல் வாழ்ந்திட முடியாததுபோல் அவனது ஆத்துமாவை சூழ்ந்து கொண்டுள்ளது.
"உன் படுக்கையில் அமர்ந்திருந்து, உன் இருதயத்தில் தியானமாயிரு" என வேதம் கூறும் ஆலோசனை மிகுந்த ஞானமும் ஆரோக்கியமும் நிறைந்ததாகும். ஆனால், இத்தனை ஆரோக்கியமான ஆலோசனையை, நம்மைச் சுற்றிக் கிடக்கும் செய்தித்தாள்கள், தொலைபேசி, வானொலி, மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றிலிருந்து மீண்டு எவ்வாறு கைக்கொண்டிட முடியும்?
இன்றைய நாகரீக உலகில் பெருகிவிட்ட களியாட்டுகள், நம்மோடு கொஞ்சி விளையாடும் புலிக்குட்டியைப் போல, நம் மடியில் கிடந்து, வளர்ந்து... இப்போது நம்மையே விழுங்கிவிடும் அபாயமுள்ளதாய் நம்மைச் சூழ்ந்து நிற்கிறது! நமக்கு ஆசீர்வாதம்போல் தோன்றியதெல்லாம், இப்போது சாபங்களாய் மாறிவருகிறது!! இந்த உலகம் ஊடுருவிச் செல்லாத "ஒரு பாதுகாப்பான இடம்" என ஒன்றுகூட இல்லை!! இதன் நிமித்தமே "மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்" (1 கொரி. 9:27) என பவுல் கூறினார்.
நாம் தேவனோடு ஒவ்வொரு நாளும் முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால், இடையூறுகளையும், சொகுசுகளையும் புறக்கணித்தே முன்னேறிச் செல்ல வேண்டும். சிலுவையின் விலைக்கிரயம் இல்லாமல், நாம் தேவனோடு இசைந்து நடந்திட முடியாது!
ஜெபம்:
அன்பின் தந்தையே! எங்களைச் சூழ எத்தனை கொடிய பாவ உலகம்! அது அத்தனையும் ஜெயித்து உம்மோடு கொள்ளும் உறவு ஒன்று போதுமே, அதை நாள்தோறும் கண்டடைய கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments