இன்று "அவருடைய" சத்தம்
அக்டோபர் 17
🔸️ பாவிகளுக்காக மரித்த இரட்சக பெருமான்! 🔸️
ஒரு ஊரில், ஒரு தகப்பன் அந்த மாவட்ட நீதிபதியாக இருந்தார். ஒரு சமயம், அவரது மகன் ஒரு பெரிய குற்றத்தைச் செய்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்! அவனுக்கு முன்பாக அமர்ந்திருந்த நீதிபதியோ, அவனது சொந்த தகப்பன்!! வழக்கின் முடிவில் 5-லட்சம் அபராதம் அல்லது 10-வருடம் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது!! அதைக் கேட்ட மகன், கண்ணீர் வடித்தான். நீதிபதி ஆசனத்தில் வீற்றிருந்த அப்பா, "மகனே, நான் உன் தகப்பனாயிருந்தாலும், நீதிபதியாகவும் இருக்கிறேன். உன் தண்டனையை நீ செலுத்தியே தீர வேண்டும்" என கூறி, நீதிமன்றத்தை கலைந்து போகும்படி கட்டளையிட்டார்.
தன் நீதிபதி உடையை அங்கிருந்த அறையில் கழற்றி வைத்தார்; பின்பு குற்றவாளிக் கூண்டில் நின்ற தன் மகனிடம் சாதாரண உடையுடன் நெருங்கி வந்து தன் பெட்டியிலிருந்த 'வங்கி-செக்' ஒன்றை எடுத்து, தன் ஜீவ காலமெல்லாம் சேர்த்து வைத்திருந்த 5-லட்சத்தை நீதிமன்ற தண்டனை தொகையாக தன் மகனுக்கென எழுதினார். தன் அன்பின் கரத்தை தன் மகனின் தோள்மீது வைத்து, "மகனே, இதோ உன் தண்டனை தொகை; நீ விடுதலையடையக்கடவாய்" என கண்களில் நீர் மல்க கூறி, அவனை விடுவித்தார்!!
பார்த்தீர்களா! "நியாயத்தீர்ப்பிற்கு" தேவன் ஒரு நியாயாதிபதி! "அன்பிற்கு" அவர் ஒரு தகப்பன்!! இறைவனின் இந்த விந்தையை எத்தனை பேர் கண்டிருக்கிறார்கள்? கிறிஸ்தவர்களுக்காக இயேசு மரிக்கவில்லை! அவர் இந்துக்களுக்காகவும் மரிக்கவில்லை! அவர் முஸ்லீம்களுக்காகவும் மரிக்கவில்லை! அவர்... அந்த இரட்சக பெருமான் இயேசு, பாவிகளுக்காக வே மரித்தார்!! (1தீமோ.1:15).
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து, ஒழுங்காக வேதம் வாசித்து, ஜெபம் செய்து, ஆலயத்துக்குச் செல்லும் கிறிஸ்தவர்களில் அநேகருக்கு "இரட்சிப்பு" தூரமாகவே உள்ளது! இவர்கள் தங்களை "பாவிகளாக" எண்ணி இரட்சகருக்கு முன்பாக மனந்திரும்பி வர முடியவில்லை! இவர்கள் "கிறிஸ்தவ பாவிகளாகவே" தங்கள் இரட்சிப்பை இழக்கிறார்கள்!!
இந்த உலகில் உள்ள ஒரு தாய்கூட, தனக்கு ஒரு பிள்ளை பிறந்தவுடன் "இப்பிள்ளை மரிப்பதற்காகப் பிறந்தவன்!" என்று கூறுவதேயில்லை.... மாறாக, "இவன் வாழப் பிறந்தவன்" என்றே கூறுவார்கள். ஆனால், இந்த சர்வ லோகத்தில், ஒரே ஒரு பிள்ளை மாத்திரமே "மரிப்பதற்கென்று பிறந்தவன்!" அந்த ஒப்பற்ற தியாகத்தை மானிடருக்காக செய்தது ஆண்டவராகிய இயேசு ஒருவர் மாத்திரமே!! மானிடரின் பாவத்திற்காக மரித்து, மரணத்தையும் ஜெயித்து, உயிரோடெழுந்தவரும் இந்த தியாகப் பெருமான் இயேசு ஒருவரே ஆவார்!!
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! பாவிகளாகிய எங்களை இரட்சித்திட நீதியின் தண்டனையை எங்களுக்காக ஏற்றுக்கொண்டீரே! உம்முடைய தியாகத்திற்கு நாங்கள் அடிபணிகிறோம், தயவாய் இரட்சித்து ஏற்றுக்கொள்ளும்!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments