"இன்று அவருடைய சத்தம்"
அக்டோபர் 29
🔸️ "சகலமும்" நன்மையாய் நடந்திட தேவனிடம் விசுவாசம் வேண்டும்!" 🔸️
யோசேப்பின் வாழ்க்கையை சற்று தியானியுங்கள். அவன் தனக்கு கிடைத்த வெளிச்சத்தின்படி தீமையிலிருந்து விலகி, தேவ பக்தியுள்ள வாழ்க்கை வாழ வாஞ்சித்து முயற்சித்தான். அவன் தேவனை பிரியப்படுத்தவே சதா விரும்பினான். தேவனும் அவனை மனநிறைவோடு ஆசீர்வதித்தார்! "ஆனால்" அவன் எவ்விதம் ஜனங்களால் நடத்தப்பட்டான் என்பதை பார்த்தீர்களா?
அவனுடைய பத்து சகோதரர்களும் சேர்ந்து அவன்மீது பொறாமை கொண்டு, அவனை எகிப்தின் கையில் விற்றுப்போட்டார்கள். இந்நிகழ்ச்சியைக் காண்பது மகா கொடியதாய் இருக்கிறதல்லவா? "ஆனால்" யோசேப்பை எகிப்தின் இரண்டாவது அதிபதியாக தேவன் நியமிப்பதற்கு இவைகள் யாவும் தேவனுடைய திட்டமாய் இருந்ததென இறுதியில் காண்கிறோமே!! அவனுடைய சகோதரர்கள் அவனுக்குச் செய்த தீமைகள் முடிவில் நன்மையாகவே விளங்கியது! பின்பு, யோசேப்பு எகிப்தை அடைந்தவுடன் போத்திபாரின் வீட்டில் வேலைக்காரனாக விற்கப்பட்டான். அங்கேயோ, போத்திபாரின் மனைவி அவனைத் தூண்டி சோதித்தாள். தெய்வபயம் கொண்ட யோசேப்போ, அவளுடைய கபட ஆசைக்கு இணங்க மறுத்தான்! சோதிக்கப்பட்ட அந்த சூழலை விட்டே வெளியேறி ஓடினான்!! உடனே போத்திபாரின் மனைவி அவனைப் பொய்யாகக் குற்றம் சாட்டி அவனைச் சிறைச்சாலைக்குள் தள்ளினாள்.
இவ்வித நிகழ்ச்சி கொடியதாய் இருக்கிறதல்லவா? "ஆனால்" யோசேப்பை சிங்காசனத்தில் அமர்த்துவதற்கு சிறைச்சாலையின் வழியாகத்தான் தேவன் திட்டம் தீட்டியிருந்தார்! எப்படியெனில், அந்த சிறைச்சாலையில்தான் பார்வோனின் பான பாத்திரக்காரனை யோசேப்பு சந்தித்து, அதன் விளைவாய் இறுதியில் பார்வோனுக்கு அறிமுகமானான் என்பதை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம் (ஆதி. 41:9-13). யோசேப்பிற்கு, பல்வேறு ஜனங்கள் இவ்வாறு தீங்கு விளைவிக்க முயற்சித்தார்கள். "ஆனால்" தேவன் தன் சர்வவல்லமையுள்ள ஆளுகையைக் கொண்டு, யோசேப்பின் வாழ்க்கையைக் குறித்து தான் கொண்டிருந்த தீர்மானம் நிறைவேறுவதற்கு அத்தீமைகள் யாவையும் நன்மையாக முடியும்படி செய்தார்!! (ரோமர் 8:28).
இதைப்போலவே நமக்கும் நடந்தேறும்! "சகலமும்" தேவன் நம் வாழ்க்கையைக் குறித்து கொண்டிருக்கும் திட்டம் நிறைவேறும்படிக்கே நடந்தேறும்! முடிவில் நம்மை கிறிஸ்துவின் சாயலுக்கொப்பாய் நிச்சயமாய் மாற்றுவார்!! ஆனால். . . . இவைகளை நாம் விசுவாசிக்க வேண்டும்! ஏனெனில், நம் விசுவாசத்தின் அளவின்படி மாத்திரமே நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! வாழ்வின் கொடிய சூழ்நிலைகளில், சகலமும் நன்மைக்கேதுவாய் கிரியை செய்திடும் உம் கரத்தை விசுவாசத்தோடு காண கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments