"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 4
🔸️ மெய்யான மனந்திரும்புதல் வேண்டும்! 🔸️
ஒரு மனிதன் தன் ஜீவியத்தை பாழ்படுத்தும் தீய பழக்கங்களை விட்டுவிட்டுத் திரும்பி இருக்கலாம். ஆனால், அதுவும் அவன் இப்பூமியில் உள்ள தன் வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்வதற்காக எடுத்துக்கொண்ட முயற்சி என்பதைத்தானே சுட்டிக்காட்டுகிறது. சிகரெட் பெட்டிகளில் சட்டபூர்வ எச்சரிக்கை "புகைப்பிடிக்கும் பழக்கம் உடல் நலத்திற்கு கேடு" என எழுதப்பட்டிருக்கும். ஆகவேதான், சிலர் புகை பிடிப்பதில்லை! இதே காரணத்திற்காகவே ஜனங்கள் குடிக்காமலும், சூதாடாமலும் இருக்கக்கூடும்! தங்களுக்கு "எய்ட்ஸ்" நோய் வந்துவிடுமோ என்ற பயத்தின் நிமித்தம் இன்று அநேகர் விபச்சாரமும் செய்வதில்லை!! ஆனால், வேதப்புத்தகம் திட்டமும் தெளிவுமாய் கூறுகிறபடி இதுபோன்ற ஜனங்களில் ஒருவர்கூட "தங்கள் பாவத்தை விட்டு" மெய்யாய் மனந்திரும்பவேயில்லை!!
நாம் தேவனுடைய மகிமைக்காய் வாழும்படியே சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு வாழாமல் நம்முடைய சுய வசதிக்காகவும், சுய பெருமைக்காகவும் வாழ்வோமென்றால், நாம் உண்மையாய் மனந்திரும்பவுமில்லை, இரட்சிக்கப்படவுமில்லை! எனவேதான், இவ்வித நமக்காக வாழும் பாவ வழியிலிருந்து நம்மை மீட்பதற்காகவே இயேசு மரித்தார் (2கொரி. 5:15). உதாரணமாய், ஒருவன் தன்னை சபையில் மற்றவர்களால் மதிக்கப்படத்தக்க பெரியவனாய் இருக்க விரும்பினால், அல்லது மற்றவர்கள் தனக்கு மரியாதை செலுத்த வேண்டும் என விரும்பினால்.... இவன் தனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதில் ஒரு துளியும் சந்தேகமே இல்லை. இவன் வேண்டுமானால் ஏதோ "மார்க்க விஷயத்தில்" தன்னை "வெள்ளையடித்து" வைத்திருக்கலாம். ஆனால் அடிப்படை பூர்வமாய் அவனிடம் எந்த மாறுதலுமில்லை! இவன் ஒருவேளை மறுபிறப்பு, ஞானஸ்நானம் போன்ற கிறிஸ்தவ மொழிகளையும் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவனுடைய உள்ளான மனிதனோ இன்னமும் அப்படியேதான் இருக்கிறான்.
தேவன் விரும்பாத யாதொன்றையும் விட்டுவிட்டு தன் சுய வழியிலிருந்து தேவனிடம் அவரது வழிக்கு வருவதே மெய்யான மனந்திரும்புதல் ஆகும்!
ஜெபம்:
பரலோக தகப்பனே! எங்களுக்காகவே வாழும் வழியை 'பாவ வழி' என அறிந்து அதிலிருந்து மனந்திரும்பும்படி நடத்தியமைக்காக ஸ்தோத்திரம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments