"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 3
🔸️ குருவை தரிசித்து ஓடும் சீஷனின் வெற்றி ஓட்டம்! 🔸️
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய முதல் இரண்டு சீஷர்களில் ஒருவனாகிய அந்திரேயா கூறிய முதல் அறிக்கையே "மேசியாவைக் கண்டோம்!" என்பதுதான் (யோவான் 1:40, 41). A.W.டோசர் என்ற பக்தன் தன் அனுதின ஜெபத்தில் "இன்று உம் முகம் நான் தரிசிக்கட்டும், அது போதும். . .இவ்வுலகத்திலுள்ள எதுவும் என்னை கவர்ச்சித்திட முடியாது" என ஜெபிப்பதுண்டு.
எவைகளையெல்லாம் வெறுக்க வேண்டும் என்ற பட்டியலல்ல சீஷத்துவம்! தன் குருவின் அழகை கண்டவன். . .எவைகளை என்றல்ல, எதையும்! எல்லாம்! வெறுத்திட மகிழ்வுடன் ஆயத்தமாயிருப்பான்.
"கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்" (பிலி.3:12) என பவுல் குறிப்பிட்ட 'அதை' என்பது எதை? அந்த வசனமே குறிப்பிடுகிறபடி "கிறிஸ்து இயேசுதான்" அதன் விடை!
அன்று தமஸ்கு வீதியில், பவுல் இயேசுவை முதலாவதாய் சந்தித்த நிகழ்ச்சியில் "வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது" (அப் 9:3) என வேதம் கூறுவதை பாருங்கள். இவ்வாறு தன்னைப் பிடித்துக்கொண்ட இயேசுவில் தன் முழு ஆசையையும் பவுல் வைத்து, அவரை அடைந்துவிடும்படி "அந்தப் பந்தயப் பொருளை" (கிறிஸ்துவை) பெறும்படியே ஆசையாய் அவரைத் தொடருகிறேன் எனக் கூறினார் (வசனம் 14).
இவ்வுலகத்தில் பொதுவாய் பந்தய ஓட்டத்திற்கு "துவக்கம்" ஒரு திசையும், "முடிவு" மறுதிசையும் இருக்கும்! ஆனால் ஒரு மெய்யான கிறிஸ்தவ ஜீவியத்தின் ஓட்டமோ "துவக்கமும் இயேசுவில்தான். . . முடிவும் இயேசுவில்தான்!" என்ற இரகசியத்தை வேதம் கூறுவதை உங்களால் காண முடிகிறதா? நம் கிறிஸ்தவ ஜீவியத்தில், இந்தப் பந்தயசாலையின் இரகசியத்தை காணாதவர்கள் எவர்களோ, அவர்கள் ஓடுவதைப்போல் ஓடினாலும், பெற்றுக்கொள்ளமாட்டார்கள்! என்றே பவுல் 1கொரி. 9:24,25 வசனங்களில் கூறினார். அது ஏனென்றால், துவக்கமும்-முடிவுமாய் இருக்கிற "மகிமையின் ஆண்டவரை" இவர்கள் கண்கள் காணவில்லை என்பதுதான்!!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! குருவின் மகிமையில் கட்டுண்டவனே சீஷன் என காண்பித்து வாழ்வின் ஓட்டத்தை ஜெயமாய் நடத்துகிறீரே, உமக்கே ஸ்தோத்திரம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments