"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 16
🔸️ வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம்! 🔸️
"வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்" (அப்.20:35) என்றல்லவா இயேசு கூறினார். இதற்கு மாறாக, நாம் பிறரிடமிருந்து ஏதேனும் அன்பளிப்பை பெறுவதற்கே நாம் விரும்புகிறோமா? அப்படியானால், நாம் ஆதாமின் புத்திரர்களாகவேதான் இன்னமும் இருக்கிறோம். ஆனால் தேவ புத்திரர்களின் ஒரு முக்கியமான குணாதிசயம் என்னவெனில், வாங்குவதைக் காட்டிலும் கொடுப்பதற்கே முதலிடம் தருவார்கள்! வேதம் சொல்லுவதைக் கேளுங்கள், "பரிதானத்தை (அன்பளிப்பை) வெறுக்கிறவனோ பிழைப்பான்!" (நீதி.15:27). இவ்வசனத்திற்கேற்ப, இனிமேலாவது நம் மனம் புதிதாகுவதாக! ஆம், தேவனுக்கு கொடுக்க கற்றுக்கொள்ளாததினாலேயே இன்று அநேகர் தொடர்ச்சியான கடனுக்குள் சிக்கியிருக்கிறார்கள்! (நீதி.21:26 - LIVING BIBLE வாசித்து பாருங்கள்).
நம் சகவிசுவாசிகள் தேவையில் இருக்கும்போது, அவர்களுக்கு கொடுக்க மனதில்லாமையும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணமாகும். "ஏழையின் கூக்குரலுக்கு தன் செவியை அடைத்துக்கொள்கிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான். (நீதி. 21:13). இதற்கு நேர்மாறாக, "ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் 'அற்புதமான வட்டியோடு' திரும்பக் கொடுப்பார்" (நீதி.19:17).
"கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்.... நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்" (லூக்கா 6:38) என்பது தேவனுடைய மாறாத சட்டமாகும். இதை நாம் ஒருபோதும் தாண்டிச் செல்ல அல்லது தவிர்த்துவிட முடியவே முடியாது. நாம் கொடுக்காவிட்டால் நிச்சயம் தேவையில் சிக்குவோம்! பிறருக்குப் பிசினித்தனம் பண்ணினால், நமக்கும் தேவன் பிசினித்தனம் பண்ணுவார்!!
'பண ஆசை' என்ற சூத்திரமே இன்று அநேக கிறிஸ்தவர்களை "தேவை" என்ற சுழலில் வீழ்த்தியுள்ளது. ஆதாமின் புத்திரர்கள் பணத்தை நேசிக்கிறார்கள். நாம் மறுபடியும் பிறந்தவுடன், இந்த பண ஆசை நம்மை விட்டு ஏதோ மாயமாய் மறைந்து விடுவதில்லை! ஆனால், இவ்விஷயத்தில் நம்மை நாமே நியாயம் தீர்த்து நம்மைக் கழுவிக் கொள்வதற்கு உண்மை உள்ளவர்களாய் இருப்போமென்றால், இப்பண ஆசை கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து, இறுதியில் முழுவதுமாய் நம்மைவிட்டு மறைந்து ஒழிந்தே போகும்! கொடுப்பதற்கு ஆசை உள்ளவர்களாய் மாறிவிடுவோம்!!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! எங்கள் ஆதாமின் சுபாவப்படி வாங்கியே பழகிய எங்களை வெறுத்து, உமக்கும் உம்முடையவர்களுக்கும் தாராளமாய் கொடுக்கும் பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments