"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 19
🔸️ நித்தியத்தின் மதிப்புள்ள வாழ்வை வாழ வேண்டும்! 🔸️
"நாம் எவைகளை நித்தியத்தில் நினைவு கூறுவோம்" என்ற தலைப்பில் சகோ.வில்லியம் பூத் (இரட்சண்ய சேனை சபையின் ஸ்தாபகர்) எழுதிய செய்தியில், தான் கண்ட ஒரு கனவைப் பற்றி எழுதியிருக்கிறார்.
அக்கனவில் அவர் தன்னை ஒரு முழு இருதயம் கொண்ட சகோதரனாய் காணாமல், சாதாரண விசுவாசியாகவே தன்னைக் கண்டார். இக்கனவில் தான் மரித்து, பரலோகத்தில் நுழைவதைப் போன்ற காட்சிகளையும் கண்டார். அங்கே பரலோகத்தில் வில்லியம் பூத் தன்னுடைய "ஜீவ புத்தகத்தை" கண்டார். அந்த ஜீவ புத்தகத்தின் பதிவேட்டில் 'மன்னிக்கப்பட்டான்" என்ற வார்த்தை மாத்திரமே பெரியதாக எழுதப்பட்டிருப்பதையும் கண்டார்.
வில்லியம் பூத் முதலில், தான் மன்னிக்கப்பட்டு இப்போது பரலோகத்தில் இருப்பதற்காக பேரானந்தம் கொண்டார்! "ஆனால்" பரலோகத்தில் வேறொரு விசுவாசிகளின் குழுவையும் கண்டார்.... அவர்களோ சொல்லி முடியா விசேஷித்த மகிமை கொண்டவர்களாய் இருந்தார்கள். யார் இவர்கள்? இந்த பூமியில் தங்கள் சொந்த ஜீவனை அருமையாய் எண்ணாதவர்கள்! இவர்கள் ஆண்டவருக்காகவும், அவருடைய சபைக்காகவும் சகலத்தையும் இழந்திருந்தார்கள்! பணத்தை, பதவியை, கௌரவத்தை.....இன்னும் இவ்வுலகம் அதிக மதிப்புடையதாய் கருதும் யாவற்றையும் இவர்கள் இழந்து தியாகம் செய்திருந்தார்கள்!!
இவர்களின் சொல்லி முடியா மகிமையைக் கண்ணுற்ற "பூத்"அவர்கள் மீது பொறாமை கொண்டார்! அச்சமயத்தில் ஆண்டவராகிய இயேசு, வில்லியம் பூத்திடம் (கனவில்) வந்து, "வில்லியம் பூத், நீ காணும் சொல்லி முடியா மகிமையில் ஜொலிக்கும் இந்த ஜனங்களோடு ஒன்றாய் சேர்ந்து கொள்ளுவதற்கு உன்னால் ஒருக்காலும் முடியாது! ஏன் தெரியுமா? நீ இந்த மகிமையான ஜனங்களைப்போல் அல்லாமல், இந்த பூமியில் உனக்காகவே ஒரு வாழ்க்கையை வாழ்ந்தாய்!" என மனம் வருந்தி கூறினார். இயேசு இவ்வாறு வில்லியம் பூத்திடம் கூறவும், வில்லியம் பூத் கனவிலிருந்து விழித்தெழவும் சரியாய் இருந்தது. அப்போதுதான், தான் இன்னமும் உயிரோடு இருப்பதையும், தான் கண்டது யாவும் கனவு மாத்திரமே என்பதையும் அறிந்தார்.
அச்சமயத்தில், அவர் எப்படியெல்லாம் உணர்த்தப்பட்டார் தெரியுமா? அன்றிலிருந்து, எஞ்சியுள்ள தன் முழு ஜீவியத்தையும் தன் ஆண்டவருக்காகவே வாழ்ந்து விடுவதற்கு உறுதியான தீர்மானம் பூண்டார்!!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! வெறும் விசுவாசி என்ற பெயரில் ஜீவியம் முடிந்துவிடாதபடி, நித்தியத்தில் மகிமையைக் காணும் முழு அர்ப்பண ஜீவியம் எங்களுக்குத் தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments