இன்று "அவருடைய" சத்தம்
நவம்பர் 24
🔸️ தேவனுடைய நேரத்திற்கு காத்திருக்க வேண்டும்! 🔸️
இன்று அநேகர், செயல்படுத்த வேண்டிய தேவனுடைய கிரியைகளைப் பொறுமையில்லாமல், அவசரகோலத்தில் முடிக்க எண்ணி "தேவனுடைய நேரம்! தேவனுடைய நடத்துதல்!" ஆகியவைகளை இவர்கள் குப்பையில் எறிந்துவிடுகிறார்கள். இதனிமித்தமாய், அவர்களின் ஜீவியம் சுக்கு நூறாய் சேதமடைந்து போனது!
ஆனால் நாமோ, "அவருடைய வழியில் நின்று, அவருடைய நேரத்தில் முன்னேறி, அவருடைய வேகத்தைப் பின்தொடர்ந்து, வாழ்ந்துவிட்டால், தேவனுடைய பாதுகாப்பு மாத்திரமல்லாமல் அவருடைய வாக்குத்தத்தத்தையும் உரிமையுடன் நாம் சுதந்தரித்திட முடியும்!"
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஜீவியம் இதற்கு சிறந்த உதாரணமாய் இருக்கிறது. பிதா தனக்கு காட்டிய திசையெல்லாம் அவர் எப்போதும் முன்னேறிச் சென்றார்! பிதாவின் சித்தம் மாத்திரமே அவரை ஆட்கொண்டிருந்தது! பிதாவின் நேரமேயன்றி சாத்தானுடைய அல்லது மனுஷருடைய எவ்வித தூண்டுதலுக்கும் அவர் இணங்கவே இல்லை! அப்படியெல்லாம் தன்னை அவசரப்படுத்தியவர்களிடம் "என் வேளை இன்னும் வரவில்லை!" (யோவான் 7:6) எனக் கூறிவிட்டார். அதாவது, "நான் முன்னேறிச் செல்லும்படி என் பிதா எனக்குச் சொன்னால் மாத்திரமே என்னால் அடியெடுத்து வைத்திட முடியும்" என்றே கூறிவிட்டார்!
தேவனுடைய நேரத்திற்காக காத்திராமல், தானாகவே கர்த்தருடைய பணியை அவசரப்பட்டு செய்ததினிமித்தம், சவுல் ராஜா தன் இராஜ்ஜிய பாரத்தையே இழந்துபோனான்! (1 சாமுவேல் 13:8-14). இதைப்போலவே, அவசர செயல்புரிந்த அநேக விசுவாசிகள் "தேவனுக்குரிய சிறந்தவைகளை" இழந்துபோனார்கள். உதாரணமாய், தேவனுடைய சித்தத்திற்காக காத்திராமல் "திருமண விஷயத்தில்" ஏராளமான விசுவாசிகள் அவசரப்பட்டிருக்கிறார்கள்! அன்று அவசரப்பட்டுவிட்டு, இன்று வீட்டில் அமர்ந்து மனம் வருந்திக் கொண்டிருக்கிறார்கள்!! ஆகவே, ஆண்டவருடைய நேரத்திற்காக காத்திருக்கப் பழகுங்கள். . . அப்படியானால் உங்கள் ஜீவியத்தின் எதிர்காலத்தில் வருந்தக்கூடியது என யாதொன்றும் இருக்காது! தனக்கு காத்திருக்கிறவர்களை கர்த்தர் ஒருபோதும் வெட்கப்படுத்துவதே இல்லை!! (ஏசாயா 49:23).
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! உம் நேரத்திற்கும், உமக்கும் காத்திருக்க நல்ல விசுவாசம் தாரும்! கர்த்தருக்கு காத்திருக்கும் நாங்கள் வெட்கப்படுவதில்லை என பறைசாற்ற கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments