இன்று "அவருடைய" சத்தம்
நவம்பர் 26
🔸️ பூமியில் பொக்கிஷம் கொண்டவர்களுக்கே கவலை ஆட்கொள்ளுகிறது! 🔸️
கவலைப்படாதிருங்கள்! என்ற புத்திமதியை, இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது என்ற வசனத்தோடு தொடர்புபடுத்தி, "ஆகையால். . . கவலைப்படாதிருங்கள்" என்றே இயேசு கூறினார். (மத்தேயு 6:24,25). இன்று ஜனங்கள் என்ன காரணத்திற்காக கவலைப்படுகிறார்கள்? ஆம், ஜனங்கள் பணத்தை சேவிப்பதனாலேயே, எல்லா கவலைகளும் உண்டாகிறதென இயேசு தெளிவாகப் போதித்தார். இன்றைய மானிடவர்க்கம் முழுவதும் இந்த ஒரு காரணத்தினாலேயே கவலை என்ற நோயினால் பீடிக்கப்பட்டுள்ளது! ஆனால் வருத்தமான காரியம் யாதெனில், இன்று அநேக கிறிஸ்தவ விசுவாசிகள்கூட கவலைப்படுகிறார்கள் என்பதுதான்!!
இக்கிறிஸ்தவர்கள் இன்னமும் தங்கள் பொக்கிஷங்களை பூமியிலேயேதான் வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு மிகவும் பிரியமான உங்கள் குழந்தையின்மேல் உங்களுடைய பொக்கிஷம் இருக்குமென்றால், நீங்கள் அந்தப் பிள்ளையினிமித்தம் நிச்சயமாய் கவலை கொள்வீர்கள்! உங்கள் பொக்கிஷம் பணத்தின்மீது இருந்தால், பணத்திற்காக கவலைப்படுவீர்கள்! உங்கள் பொக்கிஷம் சரீர சுகத்தின் மீது இருந்தால் சரீர சுகத்திற்காக கவலைப்படுவீர்கள்!! ஆனால் இவைகளிலிருந்து நாம் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இயேசு இப்பூமிக்கு வந்தார். ஆம், உலகப் பொருட்களின் பிடியிலிருந்து அல்லது பண ஆசையிலிருந்து விடுதலையாகும் மாபெரும் இரட்சிப்பு!!
சகேயுவைப் பார்த்து, "இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது" என இயேசு கூறினார் (லூக்கா 19:9). எதிலிருந்து சகேயு இரட்சிக்கப்பட்டான்? பண ஆசையிலிருந்தே இரட்சிக்கப்பட்டான்! அநீதியான தன் பண விஷயத்தில், பணத்தைத் திருப்பிக் கொடுத்து ஒப்புரவாகுவதற்கு அவன் மனப்பூர்வமாக ஆயத்தமாயிருந்தான். மெய்யாகவே இந்த சகேயு, இயேசு அவனுடைய வீட்டிற்கு வந்தபடியால் இரட்சிப்படைந்து விட்டானே! எனவே "நமக்கு ஏற்படும் கவலை யாவும் உலகப்பொருட்களை சேவிப்பதினிமித்தமே ஏற்படுகிறது" என்ற மாபெரும் உண்மையை நாம் யாவரும் அறிந்துகொள்ளக்கடவோம். நம் 'பொக்கிஷத்தை' பரலோகத்தில் வைத்து, மேலானவைகளையே நாடக்கடவோம்!!
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! எங்கள் இருதயம் பரலோக பொக்கிஷத்தில் நாட்டம் கொண்டு, பூமிக்குரிய கவலையிலிருந்து விடுதலையாக கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments