இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 4
🔸️ தேவனோடு கொண்ட ஐக்கியமே நம் முதல் தேவை! 🔸️
தனக்கு ஒரு வேலைக்காரன் வேண்டும் என்பதற்காக தேவன் ஆதாமை சிருஷ்டிக்கவில்லை! அல்லது தனக்கு ஒரு "பண்டிதன்" வேண்டும் என்பதற்காகவும் தேவன் ஆதாமை சிருஷ்டிக்கவில்லை!! "இப்போது" உங்களையும் என்னையும்கூட அவ்விதமே வேலைக்காரன் (ஊழியன்) தனக்குத் தேவை என்றோ அல்லது ஒரு பண்டிதன் தனக்குத் தேவை என்றோ ஆண்டவர் சிருஷ்டிக்கவில்லை. அவருக்கு ஏற்கனவே அவரைச் சேவிக்கும்படியாக கோடிக்கணக்கான தேவதூதர்கள் போதுமான அளவு இருக்கிறார்கள்.
ஆம், ஆதாமைத் தேவன் சிருஷ்டித்ததின் பிரதான நோக்கம், ஆதாம் தன்னோடு ஐக்கியம் கொள்ள வேண்டும் என்பதேயாகும். ஆதியிலே தேவன், "ஆறு நாட்கள் வேலை செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திரு" என்ற பிரமாணத்தை ஆதாமுக்குத் தரவில்லை! இந்த பிரமாணம் பிற்காலத்தில்தான் மோசேயின் நியாயப் பிரமாணத்தின் மூலம் ஏற்பட்டது.
இதற்கு மாறாக, ஆதாம் ஆறாம் நாளில்தான் சிருஷ்டிக்கப்பட்டான். ஆகவே, தேவனுக்கு ஏழாம் நாளாயிருந்த அந்தநாள், ஆதாமுக்கோ முதல் நாளாய் மாறியது! அதாவது, ஆதாம் தன் சிருஷ்டிகரோடு இளைப்பாறி அவரோடு ஐக்கியம் கொள்ளும் நாளாகவே ஆதாமுக்கு அந்த முதல் நாள் இருந்தது! இவ்வாறு, அந்த முதல் நாளில் ஆதாம் தேவனோடு ஐக்கியம் கொண்ட பிறகுதான், அவன் வெளியே தோட்டத்திற்குச் சென்று ஆறு நாட்களும் தேவனுக்கு ஊழியம் செய்திடும் நிலையிலிருந்தான்.
இவ்வாறு தேவன் நமக்கென ஏற்படுத்தியிருக்கும் ஒழுங்கு வரிசையை உதாசினம் செய்து "முதலாவதாக" தேவனோடு ஐக்கியம் கொள்ளத் தவறிவிட்டு, அந்த இடத்தை அவருடைய திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று அவருக்கு ஊழியம் செய்யும் நிலை மிகவும் பரிதபிக்கக்கூடிய நிலையே ஆகும். இவ்வாறு நமக்கு சம்பவித்திருக்கும் என்றால், நாம் படைக்கப்பட்டதின் பிரதான நோக்கத்தையும், நம்முடைய மீட்பின் பிரதான நோக்கத்தையும் இழந்துவிட்டோம் என்றே கூறவேண்டும்!!
குறிப்பாய், இந்தியா போன்ற ஒரு தேசத்தில், நம்மைச் சுற்றியுள்ள "தேவையினால் ஆட்கொள்ளப்பட்டு" தேவனிடம் ஐக்கியம் கொள்ளுவதற்கோ நேரம் இல்லாதுபோகும் பரிதாபம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏராளமான தேவைகள் நம்மைச் சுற்றியிருக்க, தேவனோடு ஐக்கியப்பட 'காத்திருக்கும் நேரம்' வீணான நேரமாக நமக்குத் தோன்றிவிடக்கூடாது!
ஜெபம்:
அன்பின் தந்தையே! இந்த அவசர உலகில், அலுவல்களும், ஊழியங்களும் எங்களை பலமாய் ஈர்த்துவிடாதபடி, உம் பாதம் அமரும் ஐக்கியத்தை முதன்மையாய் வைத்துவாழ கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments