இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 8
🔸️ தேவனை அன்புகூர்ந்து, நன்மை செய்பவர்களிடம் முறுமுறுப்பு இல்லை! 🔸️
தேவனிடத்தில் அன்பு கூர்ந்து அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு (அதாவது, தங்கள் ஜீவியத்தில் தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாக இப்பூமியில் எந்த இலட்சியமும் இல்லாதவர்களுக்கு) சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கும்படி கிரியை செய்திட, தேவன் சொல்லி முடியா வல்லமை பெற்றிருக்கிறார் (ரோமர் 8:28). இந்த அற்புதமான வாக்குத்தத்தத்தை, தங்களுக்கென சுயநல நோக்கம் கொண்டவர்கள் ஒருக்காலும் உரிமை பாராட்டவே முடியாது. ஆனால், நம் ஜீவியத்தில் தேவனுடைய சித்தத்தை சம்பூரணமாக ஏற்றுக் கொண்டவர்களாயிருந்தால், இப்பூமியில் நம் ஜீவியத்தின் ஒவ்வொரு நிமிஷமும் இந்த வாக்குத்தத்தத்தை உரிமை கொண்டாட முடியும்!
நமக்கு மற்றவர்கள் தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ செய்திடும் எந்த நன்மையானாலும் அல்லது தீமையானாலும் இந்த ரோமர் 8:28-ம் வசன வடிகட்டி (Filter) வழியாய் கடந்துவந்து, நமக்கு மிகவும் அருமையாகவே முடிவில் வந்து சேரும்! இவ்வாறு தேவன் நமக்கென்று திட்டம் தீட்டியுள்ள அதிக நன்மையானவைகளில் ஒன்று என்னவென்றால், ஒவ்வொரு சமயமும் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாய் நாம் மாறுவதுதான் (ரோமர் 8:29). இந்த அருமையான வசனத்தில் சொல்லப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றிடும் யாவருக்கும் "இந்த வடிகட்டி" (Filter) ஒவ்வொரு சமயமும் நன்மையை கிரியை நடப்பித்துக் கொண்டேயிருக்கும்!!
இதைக்காட்டிலும் சற்று மேலாக, 1பேதுரு 3:13, "நாம் நன்மை செய்கிறவர்களாய் இருந்தால்" ஒரு மனிதனும் நமக்கு தீங்கு செய்திட முடியாது என மிக நேர்த்தியாய் கூறுகிறது. துரதிருஷ்டவசமாக இன்று ரோமர் 8:28 அறியப்பட்டிருப்பதுபோல், இந்த அருமையான வசனத்தை அநேகர் அறியாதிருக்கிறார்கள். இருப்பினும், இந்த வாக்குத்தத்தமோ, தங்கள் இருதயங்களை எல்லா ஜனங்களிடத்திலும் நன்மை நிறைந்ததாய் காத்துக் கொண்டவர்களுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். இதுபோன்ற ஒரு விசுவாசிக்கு எந்த பிசாசோ அல்லது எந்த மனுஷனோ தீமை செய்வதென்பது ஒருக்காலும் கூடாத காரியம்! ஆகவே, "மற்றவர்கள் எனக்குத் தீங்கு செய்துவிட்டார்கள்" என எந்த ஒரு கிறிஸ்துவன் குறை கூறுகிறானோ, அப்போதெல்லாம் அவன் மறைமுகமாய் ஒத்துக்கொள்வது யாதெனில் "நான் தேவனிடத்தில் அன்பு கூரவில்லை! நான் தேவனுடைய தீர்மானத்தின்படி அழைக்கப்படவில்லை! நான் நன்மை செய்யத் தீவிரம் கொண்டவனுமல்ல!" என்ற அறிக்கையேயாகும். இப்படியில்லாதிருந்தால், அவனுக்கு மற்றவர்கள் எதைச்செய்தாலும் நன்மைக்காகவன்றோ கிரியை நடந்திருக்கும்! அவனிடம் குறைசொல்லும் இருக்காது!!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! உம்மீது நேசம் கொண்டு, உம் வழியில் நன்மை செய்திடும் எங்களுக்கு யாதொரு தீமையும் இல்லையே! குறைசொல்லும் இல்லையே! இவ்வழி தொடர்ந்து வர கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments