இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 10
🔸️ தேவனை தனிப்பட்ட விதத்தில் அறிந்திட வேண்டும்! 🔸️
"தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டிருப்பார்கள்"(தானியேல் 11:32).
இரண்டாவதாக கைமாற்றுவதுபோல் (Second Hand) பிறர் மூலமாய் நாம் தேவனை அறிந்து கொள்வதை தேவன் விரும்புவதேயில்லை. ஒரு புதிதான இளைய விசுவாசிகூட தன்னைத் தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ளும்படியே தேவன் அவனை அழைக்கிறார் (எபிரேயர் 8:11). தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் தனிப்பட்ட விதத்தில் ஒருவன் அறிந்து கொள்வதே 'நித்தியஜீவன்' என்று இயேசு விளக்கினார். இதுவே பவுலின் வாழ்க்கையில் தீராத ஏக்கமாய் இருந்தது! அது போலவே, நமக்கும் தேவனை அறிகிற அறிவை தீராத ஏக்கமாய் நமக்குள் இருந்திட வேண்டும் (பிலிப்பியர் 3:10).
தேவனை தீர்க்கமாய் அறிந்திட வாஞ்சை கொண்டவன், எப்போதும் அவர் சொல்வதைக் கவனிக்க தீவிரம் கொண்டவனாக இருக்கவேண்டும். ஒரு மனிதன் தன்னை ஆவிக்குரிய ஜீவனோடு காத்துக் கொள்வதற்கு ஒரே வழி "தேவனுடைய வாயிலிருந்து புறப்படும்" ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்துக் கேட்பதுதான்! நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் அவருடைய பாதத்தில் அமர்ந்து அவர் கூறுவதை கவனித்துக் கேட்பதே மிக முக்கியமானதென்று ஆண்டவராகிய இயேசு லூக்கா 10:42-ல் கூறியிருக்கிறார்.
இயேசு ஒவ்வொரு நாள் காலையிலும் தன் பிதா சொல்வதை கவனித்துக் கேட்கும் பழக்கம் வைத்திருந்ததைப் போலவே, நாமும் அந்தப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்!(ஏசாயா 50:4). காலையில் மாத்திரம் அல்லாமல்..... அந்தப் பகல் முழுவதும்..... நாம் தூங்கும் இரவு நேரங்களிலும் அவ்விதமே இருப்போமென்றால், இரவிலும் நம்மை அதேபோல் 'கவனித்துக் கேட்கும்' மனதுடையவர்களாகச் செய்வார்! நாம் எழுப்பினாலும், "கர்த்தாவே சொல்லும் உமதடியான் கேட்கிறேன்" என கூறிட முடியும் (1சாமுவேல் 3:10).
நாம் தேவனை நெருக்கமாய் அறிந்திருப்பதுதான், நம்மை எல்லா சூழ்நிலைகளிலும் ஜெயம் பெற்றவர்களாய் மாற்றிவிடும்! ஏனென்றால், நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தேவனிடத்தில் விடை உண்டு! நாம் அவரை கவனித்துக் கேட்டால், அந்த விடையை அவர் நமக்கு நிச்சயமாய் சொல்லுவார்!!
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! பிறர் மூலமாய் அல்ல, நாங்களே உம்மிடம் நேரடியாய் வந்து, உம் வார்த்தை கேட்டு, உம் வழி நடக்க உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments