இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 17
🔸️ சகலமும் தேவனுடைய மகிமைக்கே செய்யப்படவேண்டும்! 🔸️
பிலிப்பியர் 3:13-ல் பவுல் "பின்னானவைகளை மறந்து" எனக்கூறினார். அவ்விதம் பவுலுக்குப் பின்னாக இருந்தவைகள் யாது? ஒரு வெற்றியுள்ள ஜீவியமும்! தேவனுக்காக நிறைவேற்றிய வல்லமையான ஊழியமுமே, பவுலுக்குப் பின்னாக இருந்தது! ஆனால் பவுலோ அவை யாவற்றையும் தன் மனதிலிருந்து அகற்றினார். ஏனென்றால், அவர் தன் ஜீவியத்திற்காகவும் தன் ஊழியத்திற்காகவும் தேவனுக்கே சகல மகிமையும் செலுத்தினார்!
நியாயத்தீர்ப்பு நாளில் தனக்கு முன் நிற்கும் இரு கூட்டத்தாரைக் குறித்து இயேசு குறிப்பிட்டுக் கூறினார். அதில் ஒரு கூட்டத்தார், "கர்த்தாவே உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம், உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம், உமது நாமத்தினாலே அநேக அற்புதக் கிரியைகளைச் செய்தோம்" என்பார்கள். ஆனால் ஆண்டவரோ, அவர்களைப் பார்த்து, "அக்கிரம செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என்றே கூறுவார் (மத்தேயு 7:22, 23).
ஆனால் ஆண்டவர் இரண்டாவது கூட்டத்தாரை குறிப்பிட்டு பேசும்போது, "நான் பசியாயிருந்தேன், எனக்குப் போஜனம் கொடுத்தீர்கள்..... வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரம் கொடுத்தீர்கள்..... வியாதியாய் இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்" எனக் கூறுவார்.
ஆனால் அவர்களோ தாங்கள் இவைகளையெல்லாம் செய்தோம் என்ற தன்னுணர்வு அற்றவர்களாகவே காணப்பட்டார்கள்.
ஆகவே அவர்கள், "ஆண்டவரே, எப்பொழுது இவைகளையெல்லாம் உமக்குச் செய்தோம்? இவைகளையெல்லாம் செய்ததாக எங்களுக்கு நினைவில்லையே!" என்பார்கள். ஆ....இது எத்தனை மகா அருமை! இவர்கள் பதிலைக் கேட்ட நம் நல்ல ஆண்டவர், "நீங்கள் பாக்கியவான்கள்! என்னுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிப்பதற்கு நீங்களே பாத்திரவான்கள்!" என உள்ளம் பூரிக்க கூறுவார்! (மத்தேயு 25:31-40).
ஒரு நீதிமான் நன்மையை செய்வான்.... செய்து முடித்தவுடன், அவைகளை மறந்து விடுவான். அநீதியான மனுஷனோ தான் செய்த எல்லா நன்மைகளையும் தன் மனதில் டைரியில் ஞாபகமாய் எழுதி வைத்துக் கொள்வான்!!
இவ்வாறு நாம் தேவனுக்காகவும் பிறருக்காகவும் செய்த எல்லா நன்மைகளையும் குறித்து தன்னுணர்வு கொண்டு மகிமையில் மிதக்கிறோமா? நாம் ஜாக்கிரதையாக இருப்போமாக!
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! அன்பு செலுத்துவதும், ஊழியம் செய்வதும் தேவனுக்கு செய்வதாகவே எப்போதும் இருந்து, "நான் செய்தேன்" என்ற உணர்வை அகற்றிட கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments