இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 24
🔸️ துன்பங்கள் கொண்டுவரும் பாக்கியங்கள்! 🔸️
"நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது"
(மத்தேயு 5:10) என துன்பத்தோடு "பாக்கியத்தையும்" ஆண்டவர் இணைத்துக் கூறுவதைப் பாருங்கள். நம்மை துன்பப்படுத்துகிறவர்களை மன்னிக்கவும், அன்புகூரவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் இயேசு கற்றுக் கொடுத்தார்! இவ்வாறு, நமக்குத் தீமை செய்கிறவர்களுக்கு நன்மை செய்வது மூலமாய் "நாம் அன்புள்ள பிதாவின் பிள்ளைகள்" என்பதை நிரூபிக்கிறோம். ஆம், தேவன் எல்லோருக்குமே நல்லவராகத்தான் இருக்கிறார்! ஒருவேளை உங்கள் நெருங்கிய நண்பரோ, அல்லது உறவினரோ உங்கள் முதுகிற்குப் பின்பாக உங்களுக்கு கொடிய தீங்கு இழைத்திருக்கலாம். அதற்காக நீங்கள் அழ வேண்டாம்! அதற்குப் பதிலாய், "இயேசுவின் அடிச்சுவடுகளில்" நானும் நடந்துவர சிலாக்கியம் பெற்றேனே என்பதில் களிகூர்ந்திடுங்கள். இது போன்ற சமயங்களில், 'கிறிஸ்துவின் சிந்தையே' உங்களை ஆண்டு ஆட்கொள்ளக்கடவது!!
ஆண்டவர் நிமித்தமாய் நீண்ட ஆண்டுகளாய் சிறையிலிருக்கும் சில 'பாஸ்டர்களைக்' குறித்து நான் வாசித்திருக்கிறேன். அவர்களுடைய மனைவிகளுக்குத்தான் இது எத்தனை வேதனையாய் இருக்கக்கூடும்! இன்றும் கூட, அநேக நாடுகளில் உபத்திரவத்திற்குள் ஆளாகியிருக்கும் கிறிஸ்தவக் குடும்பங்களுக்காக நாம் யாவரும் ஜெபித்திட வேண்டும். நம் இந்திய தேசத்திற்கும் உபத்திரவங்கள் வரும் காலம் நெருங்கிவிட்டதை நாம் உணர்கிறோம். நாம் விசுவாசத்தில் உறுதியாக இருக்கும்படியாக தேவன் நம்மை காத்துக்கொள்ள நாம் ஜெபம் செய்திடக்கடவோம். இந்த சமயங்களில் ஆண்டவர் நிமித்தமாய் உபத்திரவத்திற்கு ஆளாகி மரித்த இரத்தசாட்சிகளைப் பற்றிய புத்தகங்களை நாம் வாங்கி வாசிப்பது நல்லது. இதுபோன்ற புத்தகங்கள், நாம் உபத்திரவங்களை சந்திக்கும் நேரத்தில் நம்மை ஸ்திரப்படுத்த நிச்சயமாய் உதவும்!
"இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல" (ரோமர் 8:18) என்றும்,
"அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது."
(2 கொரி.4:17) என்றும், வசனங்கள் நம்மைத் தேற்றுவதை ஏற்றுக்கொள்ளுங்கள்!
ஜெபம்:
எங்கள் அன்பின் பிதாவே! மெய்யாகவே எங்கள் வாழ்வில் நிகழும் துன்பங்கள் வேதவசனம் எங்களில் நிறைவேறவும், பரத்தின் மகிமை அடைந்திடவும் செய்கிறதே! கவனமாய் எங்களை ஒப்புக்கொடுத்து வாழ கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments