இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 25
🔸️ இதோ, நற் சுவிசேஷம்! இனி நாம் அழ வேண்டாம்! 🔸️
"அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம், இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்"
(வெளி.5:5).
"நீ அழ வேண்டாம்." இங்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. இதுவே உண்மையான சுவிசேஷம். அது யாதெனில், இயேசுகிறிஸ்து, தாவீதின் மாம்சத்திற்கொப்பான மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதுதான்! புதிய ஏற்பாட்டில், இயேசு "தாவீதின் வித்தில்" வந்தவர் என பல இடங்களில் வாசிக்கிறோம். இந்த சத்தியம் மிக மிக முக்கியமானது. இதே சத்தியம் வேதாகமத்தின் கடைசிப் பக்கமாகிய 22-ம் அதிகாரத்தில் மீண்டும் வலியுறுத்தி எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அந்த வசனம் கூறுவது யாதெனில், "இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்" (வெளி.22:16). ஆம், அவர் நம்மைப் போன்ற மாம்சத்தில் வந்தார்! இவ்விதமே அவர் நமக்கு நெருங்கிய உறவினரானார். இதுவே சுவிசேஷம்! இனியும் அழவேண்டாம்!
நம்மைப்போன்ற மாம்சத்தில் நெருங்கிய உறவினராக ஒருவர் வந்துவிட்டார்!! ஒருவேளை இயேசுகிறிஸ்து வேறுவிதமான மாம்சத்தில் வந்திருந்தால், அவர் நம்முடைய நெருங்கிய உறவினன் ஆகியிருக்க முடியாது. அவர் நம்மை மீட்டிருக்கவும் முடியாது. எனவேதான் பவுல் ரோமர் 1-ம் அதிகாரத்தில், "நான் பிரசங்கிக்கிற சுவிசேஷம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும். . . . பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனைப் பற்றியது" என்றார்.
தாவீதின் வேரிலிருந்து வந்தே இயேசு கிறிஸ்து ஜெயங்கொண்டார். தேவன் பாவத்தை அவருடைய மாம்சத்தில் நியாயம் தீர்த்தார். இவ்விதம் அவர் ஜெயித்தபடியால் மாத்திரமே பாத்திரவானாய் மாறினார்! இதுவே நற்சுவிசேஷம்! இச்சுவிசேஷத்தின்படி, இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நாம் பாவமன்னிப்படைந்து இரட்சிக்கப்பட்டது மாத்திரமல்லாமல், நாமும் அவரைப்போலவே பாவத்தை ஜெயித்துவாழ முடியும்!!
ஜெபம்:
எங்கள் அன்பின் தந்தையே! தாவீதின் சந்ததியில் இயேசு கிறிஸ்துவை எங்கள் இரட்சகராய் அனுப்பியது மாத்திரமல்லாமல், அவர் மூலம் அளித்த "பாவத்தின் மேல் ஜெயத்தையும்" பெற்றிருக்கிறோமே! உமக்கே ஸ்தோத்திரம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments