இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 27
🔸️ பிறருக்காக ஆத்தும கரிசனை வேண்டும்! 🔸️
அநீதியாய் சிறையிலடைக்கப்பட்ட யோசேப்பின் சரித்திரத்தை சிந்தித்துப் பாருங்கள். அந்தச் சிறைச்சாலையில் யோசேப்பு தன் சொந்த துக்கங்களை மறந்தவனாய், சிறைக்கைதிகளின் துக்கங்களே அவனை ஆட்கொண்டிருந்தது! இவ்வாறு பார்வோனின் பானபாத்திரகாரன் மீது யோசேப்பு கொண்டிருந்த அக்கறைதான், முடிவில் அவன் சிறையிலிருந்து வெளிவருவதற்கும் நடத்தியது!!
பார்த்தீர்களா, மற்றவர்கள்மீது கொண்ட மெய்யான அக்கறையே உங்களின் விடுதலைக்கு வகுத்துத் தரும் முதற் படியாய் மாறிவிட முடியும்! (ஆதியாகமம் 40:7).
"அள்ளித்தூவும் விதையை சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான். ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்" (சங்கீதம் 126:6) என்றே வேதம் உத்திரவாதம் அளிக்கிறது.
தேவ ஜனத்தின் பின்மாற்றத்தைக் கண்டு, தன்னுடைய கண்கள் "கண்ணீர் ஊற்றாய் மாறி ஜனங்களுக்காய் தொடர்ச்சியாய் தன்னுடைய கண்கள் அழுதிட வேண்டுமென விரும்பி" (எரேமியா 9:1; 13:17) எரேமியா அழுதார்.
தேவ ஜனத்தின் பாவங்களுக்காக தானியேல் அழுதார் (தானியேல் 9:20,21).
வீழ்ச்சியடைந்த தேவ ஜனத்தின் நிலையைக் கண்டு எஸ்றாவும், நெகேமியாவும் அழுதார்கள் (எஸ்றா 10:1; நெகேமியா 1:4).
மனந்திரும்பாத தன் சொந்த யூத ஜனங்களுக்காக தன் இருதயத்தில் பவுல் இடைவிடாத துக்கம் கொண்டிருந்தார் (ரோமர் 9:1-3).
நம் தேசத்திலுள்ள விக்கிரக கோபுரங்களையும் சிலைகளையும் நாம் ஏராளமாய் பார்த்துப் பழகி விட்டபடியால், அவைகள் நம் ஆவியில் எந்த சலனமும் ஏற்படுத்தாததுபோல் தோன்றுகிறது (அப்போ. 17:16). ஆனால், நாம் வாழும் இந்த தேசத்தின் நிமித்தம் ஆண்டவருக்கு முன்பாக நம் யாவருக்குமே ஒரு பொறுப்பு இருக்கத்தான் செய்கிறது! இதைத் தேவன் குறிப்பிடும்போது, "என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்" (2 நாளாகமம் 7:14) எனக் கூறினார்.
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! எங்கள் ஜெபங்கள் சுயநலமாய் இல்லாமல், பிறரின் இரட்சிப்பிற்காக, எங்கள் தேசத்தின் இரட்சிப்பிற்காக பரிதவிக்கும் ஜெபமாய் மாற கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments