இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 28
🔸️ துன்பத்தில், பரம நோக்கம் நிறைவேறிட உடன் நிற்கும் ஆண்டவர்! 🔸️
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் ஆண்டவருக்கு முழுமையாய் அர்ப்பணம் செய்யப்பட்டிருந்தால், சரீர வேதனை உங்களுக்கு வரும்போது அது உங்களுக்கு சற்றே இலகுவாய் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். கடந்த நாட்களில் ஒரு தலைவலிகூட உங்களால் தாங்க முடியாததாக இருந்திருக்கக்கூடும். ஆனால் இப்போதோ உங்கள் உயிருக்கே ஆபத்தான வியாதி வந்தாலும், நீங்கள் அதற்காக ஜெபித்து.... பின்பு கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருந்திட முடியும்! "நாம் தண்ணீர்களைக் கடக்கும் வேளையில் அது நம்மேல் புரளுவதில்லை," என்றும் அவர் உறுதியளித்து வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். இந்த வசனங்களை 'Living Bible' மொழிபெயர்ப்பு நேர்த்தியாகக் கூறுகிறது:
"ஆழமான தண்ணீர்களின் கொடிய துன்பங்கள் மத்தியில் நான் உன்னோடேயிருப்பேன். கஷ்டத்தின் ஆறுகளை நீ கடந்து செல்லும்போது நீ மூழ்கிப் போகமாட்டாய்! நெருக்கத்தின் அக்கினியில் நடந்து செல்லும்போது நீ எரிந்து போகமாட்டாய்! அக்கினி ஜுவாலைகள் உன்னைத் தீண்டாது. நீ பயப்படாதே! நான் உன்னோடு இருக்கிறேன்" (ஏசாயா 43:2,5).
ஒவ்வொரு சூழ்நிலைக்கும் அவருடைய கிருபை நமக்கு போதுமானதாகவே இருக்கிறது! நம்முடைய உபத்திரவங்கள் அதிகரிக்க, அதிகரிக்க தேவன் வழங்கும் கிருபையின் அளவும் நமக்கு அதிகரித்துக்கொண்டே செல்லும்! இந்த நல்ல தேவனுக்கே துதி உண்டாகக்கடவது!!
"தேவனுடைய விலையேறப் பெற்ற அலங்கரிப்பாய்" திகழ்ந்த அநேகர், கற்பனைக்கும் எட்டாத துன்பத்தின் ஆழங்களிலிருந்து தோன்றியவர்களேயாவர். "வைரங்கள்" பூமியின் ஆழத்திலிருந்து உருவாகுவதைப் போல், இவர்களும் சொல்லிமுடியா வெப்பத்திலும் அழுத்தத்திலும் துன்பங்கள் சகித்து, எல்லா மனுஷருடைய கண்களுக்கும் மறைவாயிருந்து தோன்றியவர்களேயாவர்!
இதேபோல் நீங்களும்கூட ஆண்டவருடைய விலையேறப்பெற்ற அலங்காரமாய் இருந்துவிட முடியும்! தேவன் உங்களோடு இடைபடும் சமயங்களில், மகிழ்ச்சியுடன் உங்களை ஒப்புக்கொடுத்து சுய-பட்சாதாப கண்ணீர் வடிக்காதவர்களாய் நீங்கள் இருந்தால்..... தேவன் மாத்திரமே கண்டிட்ட உங்கள் கண்ணீர், உங்களை கிறிஸ்துவின் சாயலுக்கொப்பாய் மறுரூபப்படுத்திட கிரியை செய்வதாய் மாறிவிடும்!
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! எங்களை உம்மிடம் முழுவதும் தந்தோம்! வாழ்வின் வெப்பத்தில் துணைநின்று, உம்மைப்போல் எங்களை மாற்றுவதற்காக ஸ்தோத்திரம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments