இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 20
🔸️ மாய்மாலமற்ற ஜீவியம் வேண்டும்! 🔸️
'மாய்மாலக்காரன்' (HYPOCRITE) என்ற வார்த்தை கிரேக்க பதத்திலிருந்து தோன்றியதாகும். அதன் சரியான பொருள் 'நடிப்பவன்' என்பதாகும். 'ஆலிவுட் திரையில்' (Hollywood Movie) யோவான் ஸ்நானகனாக நடித்த நடிகனை எண்ணிப் பாருங்கள். இவனோ தன் நிஜ வாழ்க்கையில் குடிகாரனாகவும், இரண்டு அல்லது மூன்று மனைவிகளை விவாகரத்து செய்து வாழ்ந்த வேசிக்கள்ளனாகவும் இருந்தான். ஆனால், திரைப்படத்திலோ இவன் 'பரிசுத்தமான தீர்க்கதரிசி!' இவ்விதம் தன் நிஜ வாழ்க்கையில் மாறுபட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, மனுஷர் முன்போ நேர்மையாளனைப் போல நடிப்பவனே 'மாய்மாலக்காரன்'.
இவ்வித மாய்மாலக்காரன், தான் ஒரு முழு இருதயமான கிறிஸ்தவனைப் போலவே மற்ற விசுவாசிகளுக்கு முன்பாக நடிப்பான். ஆனால் அவன் வீட்டில் தன் மனைவியை நடத்தும் விதத்தையும், அவன் தன் அலுவலகத்தில் உள்ள மற்றவர்களோடு பழகும் விதத்தையும் காண்பீர்கள் என்றால், அங்கு அவனை முற்றிலும் மாறுபட்ட மனிதனாகவே காண்பீர்கள். ஏன்? இங்கு இவன், 'இப்போது' நடிக்கவில்லை! ஆம், அவன் தன் வீட்டிலும், தன் அலுவலகத்திலும், தன் உண்மை சொரூபத்தை காட்டும் மனிதனாய் இருக்கிறான். இப்படிப்பட்டவன் மதஸ்தனாய் இருக்கலாம்; ஆனால், ஆவிக்குரியவன் அல்லவே அல்ல!
இவ்வித மாய்மாலத்திலிருந்து உண்மையாகவே நீங்கள் விடுதலையாக விரும்புகிறீர்களா? அப்படியானால், "தேவனே! மனுஷர்கள் என்னை புகழ்வதை விட, நீர் என்னை புகழ்வதையே மேலாக விரும்பி நாட்டம் கொள்வதற்கு, என் உள்ளத்தில் உம்மை குறித்த அதிகமான தெய்வ பயத்தை கொடுத்தருளும்" என கெஞ்சி ஜெபியுங்கள்.
எந்தப் பாவத்தையும்விட இயேசு இந்த மாய்மாலத்தையே அதிகமாகக் கண்டித்தார்!
ஜெபம்:
அன்பின் தகப்பனே! மனுஷருக்கு முன்பாக "மாய்மால நடிப்பை" நாங்கள் வெறுக்கிறோம். எப்பக்கத்திலும் "நிஜமான பக்தி வாழ்க்கை" வாழ தெய்வபயம் ஈந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments