இன்று "அவருடைய" சத்தம்
மே 16
🔸️ நாம் சிலுவையில் அறையப்படும் வாழ்வே ஆவியில் நிறைந்த வாழ்வு! 🔸️
"சிலுவையில் அறையப்பட்டு வாழும்" வாழ்க்கையே ஆவியில் நிறைந்து வாழும் ஜிவியமாய் இருக்கிறது. "கிறிஸ்துவுடனேகூட நான் சிலுவையில் அறையப்பட்டேன்" (கலாத்தியர் 2:20) என்பதே பவுலின் ஜீவியமாயிருந்தது! சிலுவையின் பாதையே ஆவியின் நிறைவான பாதையாகும்!! இயேசுவை சிலுவைக்கு நடத்திச் சென்றதைப் போலவே, நம்மையும் ஆவியானவர் சிலுவை நோக்கியே எப்போதும் நம்மை நடத்திச் செல்வார்! ஏனெனில் ஆவியானவரும், சிலுவையும் பிரிக்க முடியாத ஒன்றாகவே எப்போதும் செயல்படுகிறது!!
பெலஹீனத்திற்கும், அவமானத்திற்கும், மரணத்திற்குமே சிலுவை அடையாளமாய் இருக்கிறது! நாம் தியானிக்கும் அப்போஸ்தலனாகிய பவுலின் ஜீவியத்திலும் அவ்விதமே பயமும், கலக்கமும், வருத்தங்களும், கண்ணீர்களும் நிறைந்த வாழ்க்கையையே நாம் காண்கிறோம் (2 கொரிந்தியர் 1:8; 4:8; 6:10; 7:5). ஓரு பைத்தியத்தைப்போலவும், மதிமயங்கியவனைப் போலவுமே பவுல் ஜனங்களால் கருதப்பட்டார். அனேக சமயங்களில் குப்பையைப் போலவும், எல்லாராலும் துடைத்துப் போடுகிற அழுக்கைப்போலவும் பவுல் நடத்தப்பட்டார் (1கொரிந்தியர் 4:13). இது போன்ற இழிவான வாழ்க்கையிலிருந்து மீட்கப்படுவதல்ல ஆவியில் நிறைந்து வாழும் வாழ்க்கை! மாறாக, ஆவியில் நிறைந்து வாழும் மனிதனோ, தேவன் தன்னை மேலும் மேலும் தாழ்மைப்படும் வாழ்க்கைக்குள் நடத்தி, முடிவில் தன் சுய-வாழ்க்கைக்கு அவர் மரணத்தைக் கொண்டு வருவதையே காண்பான்!!
ஆவியில் நிறைந்த மனிதன் மனுஷருடைய புகழ்ச்சியை சற்றேனும் பொருட்படுத்தவே மாட்டான்! அவன், தனக்கு ஏற்படும் இழிவுகளையும், நிந்தைகளையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வான்!! அவன் மேன்மை பாராட்டுவதெல்லாம் "சிலுவை ஒன்றேயல்லாமல்" வேறு எதையும் குறித்து மேன்மை பாராட்டிட மாட்டான்!! (கலாத்தியர் 6:14). தன் வரங்களிலும் அல்லது திறமைகளிலும் அல்லது தான் பெற்ற ஆழ்ந்த ஜீவியத்தின் அனுபவங்களிலும்கூட அவன் மேன்மை பாராட்டவே மாட்டான்! ஆம், சிலுவையில் தன் சுய-வாழ்க்கைக்குத் தொடர்ச்சியாக மரிப்பது ஒன்றைக்குறித்தே பவுல் மேன்மை பாராட்டினார்!!
தெய்வீக அன்பின் சின்னமாய் திகழ்வதும் இந்த சிலுவைதான்! தேவன் மனுஷர்மீது கொண்டிருந்த தன் அன்பை வெளிப்படுத்திட, இந்த சிலுவையிலேதான் இயேசு மனுஷருக்காய் மரிக்க வேண்டியிருந்தது!!
ஜெபம்:
பரம பிதாவே! சூழ்நிலைகளில் எங்களைத் தாழ்த்தி, மெய்யாகவே சிலுவையில் அறையப்படும் வாழ்வே எங்களின் மேன்மையாய் இருந்திட உதவி புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments