இன்று "அவருடைய" சத்தம்
மே 20
🔸️ நித்தியத்திற்கு தரவேண்டிய மதிப்பை நாம் இழந்திடக்கூடாது! 🔸️
ஒரு குருடன் தன் கையில் கிடைத்த ஆயிரம் ரூபாய் காசோலையை தூக்கி எறிந்துவிட்டு, எந்த மதிப்பும் இல்லாத ஒரு பளபளப்பான பேப்பரை மடித்து வைத்துக்கொண்டான்! ஏனென்றால், அந்த பேப்பர்தான் தொடுவதற்கு வழுவழுப்பாயும், அவனுக்குப் பிரியமாயும் தென்பட்டது!! அவன் குருடனாய் இருந்தபடியால் "உண்மையான மதிப்பிற்கு" உணர்வற்றவனாய் இருந்தான். அதுபோலவே, இரண்டு வயது குழந்தையும் நூறு ரூபாய் தாளை உதறிவிட்டு, ஒரு மலிவான பொம்மையை எடுத்துக்கொள்கிறது. இந்தக் குழந்தையும் "உண்மையான மதிப்பைக் குறித்த" அறியாமையில் இருக்கிறது. ஏனென்றால், குழந்தைக்கு வளர்ச்சி இருப்பது இல்லை!!
மனிதன் ஆவிக்குரிய குருடனாகவே பிறந்திருக்கிறான். ஆகவேதான், அவனவன் தன்தன் காலத்தில் 'அவன் கருதும்' மதிப்புள்ளவைகளை, நித்தியத்தின் மதிப்புள்ளவைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் திறனை இழந்தவனாய் இருக்கிறான். அதன் விளைவாய், அவன் தன் நேரத்தையும், தன் சக்திகளையும் இந்த உலகில் அவன் மதிப்பிடும் ஆஸ்தி, அந்தஸ்து மற்றும் உள்ள உலக இன்பங்களைத் தேடுவதற்கென்றே செலவழித்து சீரழிந்து போகிறான். சத்திய வேதம் குறிப்பிடுகின்ற "காணப்படுகிறவைகள் (அனைத்தும்) அநித்தியமானவைகள்; காணப்படாதவைகளோ (அவைகள் மாத்திரமே) நித்தியமானவகைகள்" (2 கொரிந்தியர் 4:18) என்ற சரியான உணர்வு அவனுக்கு சிறிதளவுகூட இருப்பதில்லை!
ஆண்டவராகிய இயேசு, தன் காலத்தில் வாழ்ந்த பக்தியுள்ள ஜனங்களிடம்கூட "தவறாக மதிப்பிடும் உணர்வு" இருந்ததைக் கண்டு, அவர்களை வெகுவாய் கடிந்து கொண்டார். அவர்களை துயரத்தோடு பார்த்து, "ஒரு மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தி விட்டால் அதினால் அவனுக்கு எந்த இலாபமும் இல்லையே!" என கூறினார்.
இவ்வுலகில் உள்ள எந்த மனிதனானாலும், இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவனோடு சரியான உறவை பெற்று நித்தியத்தின் மதிப்பை கண்டடைய வேண்டும்! அப்படியில்லையென்றால், ஒரு நாளில் தன்னை சிருஷ்டித்த கர்த்தருக்கு முன்பாக நிற்கப் போகும் வேளையில், இந்த பூமியிலிருந்து அவன் சாதித்து, தனக்கென சொந்தமாக்கிக் கொண்ட அனைத்தும் "ஒன்றிற்கும் மதிப்பில்லாதவகைகள்" என்ற உண்மையைக் கண்டு திகைத்துப் போவான்!! இது நிச்சயம்.
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! எங்கள் ஆத்துமாவுக்குரிய நித்தியமானவைகளை மதித்து ஆதாயம் செய்திட கிருபை தாரும்! உலகத்தின் அனைத்து ஆதாயமும் ஒன்றுக்கும் உதவாது என்ற உணர்வோடு வாழ உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments