இன்று "அவருடைய" சத்தம்
மே 21
🔸️ தேவனுடைய சிந்தை நமக்கும் வேண்டும்! 🔸️
இயேசு பேதுருவைப் பார்த்து கூறுகையில், "நீ தேவனுக்கு ஏற்றவைகளை சிந்தியாமல் இருக்கின்றாய்" என அவனை இடித்துரைத்தார் (மாற்கு 8:33). இப்பேதுருவின் நிலையைப் போன்றுதான் இவ்வுலகில் வாழும் அநேக சகோதர சகோதரிகளின் நிலையும் உள்ளது. இவர்கள் தேவனைத் தேடி, அவரிடம் ஜெபித்து, இரட்சிப்பிற்குள் கடந்துவரவே விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுடைய வளர்ச்சியோ, "தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல்" "மனுஷருக்கு ஏற்றவைகளையே சிந்திக்கும்" தரம் குறைந்த பின்மாற்ற நிலையில் தேங்கியுள்ளது!
"எவைகளெல்லாம் மனுஷனுக்கு ஏற்ற சிந்தைகள்?" என்பதை உங்களுக்குள் கேட்டுப்பார்த்து அவைகளை வரிசையாக ஒரு பேப்பரில் எழுதுங்கள். இவ்வாறு எழுதிய உங்கள் பட்டியலை அடிக்கடி வாசித்துப் பார்த்து "மனுஷருக்கு ஏற்ற சிந்தைகள்" எவை எவைகள் என்பதைக் குறித்த வெளிச்சத்தைப் பெறுங்கள்! இவ்வாறு நீங்கள் செய்வது உங்கள் சுயநிலையை நீங்கள் அறிந்து கொள்வதற்கு நிச்சயம் உதவும்!!
நாம் எந்த அளவு நம் சுயநிலையை அறிந்திருக்கிறோமா, அந்த அளவுதான் அவற்றிலிருந்து விடுதலையாகவும் முடியும்!
"மனுஷருக்குரிய சிந்தைகள்" எவ்வளவு கொடூரமானதென நாம் காணவேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. ஏனெனில், இவ்வித மனுஷருக்கு ஏற்ற சிந்தைகள்தான் நாம் தேவனுக்கு எதிரிடையாய் கிரியை செய்வதற்கே நம்மை நடத்துகிறது. இவ்வாறாக நம் ஆத்துமாவின் இரட்சிப்பிற்காக கிரியை நடப்பிக்க வேண்டிய நாமே, நம்முடைய சொந்த இரட்சிப்பிற்குத் தடையை உண்டு பண்ணுகிறோம்!
தேவனின் மனதில் இருக்கும் சிந்தைகளோ, மனுஷரின் மனதில் இருக்கும் சிந்தைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். உதாரணமாய், "தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" (மத். 23:12) எனக் கூறிய இயேசுவின் வார்த்தைகள், "நம்மை நாமே நாம் தாழ்த்த வேண்டும்" என்ற தேவனுடைய சிந்தையை நமக்கு வெளிப்படுத்துகிறது. இவ்வாறு, அவருடைய ஆர்வமான சிந்தனையின்படி நம்மை நாமே தாழ்த்திவிட்டால், நம்மை தேவன் உயர்த்தும்படி நாம் கேட்காவிட்டாலும், அவரே நிச்சயமாய் நம்மை உயர்த்துவார்!
ஜெபம்:
எங்கள் அன்பின் தகப்பனே! மனுஷருக்குரிய சிந்தையில் நாங்கள் வீணராகிவிடாமல், "உமது சிந்தையை" அதிகமதிகமாய் அறிந்து வாழ எங்களுக்கு உதவும்! குறிப்பாக இயேசு கொண்டிருந்த "தாழ்மையின் சிந்தையை" எங்களுக்குத் தந்தருளும்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments