இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 1
🔸️ பிறரை மன்னித்திடும் மென்மையான இரக்க சுபாவம் வேண்டும்! 🔸️
ஒரு கடின இருதயத்தில் "மன்னிக்காத சுபாவம்" இருப்பதை காண்கிறோம். தனக்குத் தீங்கிழைத்துவிட்ட ஒருவரின் செயலை எப்போதும் தங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, அவர்களைக் காணும்பொழுதெல்லாம் மன்னித்துவிட மறுக்கும் கண்களோடு பார்க்கிறார்கள்! இப்படியெல்லாம் இருப்பது இயேசு கிறிஸ்துவின் ஆவிக்கு முற்றிலும் மாறுபட்ட குணமே ஆகும். எபேசியர் 2:4 "தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர்" என அவருடைய சுபாவத்தை மிக அழகாக எடுத்துக்கூறுகிறது. தேவன் எத்தனையோ பல காரியங்களில் பூரண ஐஸ்வரியமுள்ளவராக இருந்தாலும், அவரோ "இரக்கத்தில் ஐஸ்வர்யம் உள்ளவர்" எனக் குறிப்பாக உயர்த்திக் கூறப்பட்டிருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அந்தப்படியே ஓர் உண்மையான ஆவிக்குரிய மனுஷனும் உலக சம்பத்துக்களைக் காட்டிலும் தெய்வசுபாவமாகிய இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவனாய் திகழ்வான். உலக ஐஸ்வரியங்களுக்கு நித்தியத்தில் எந்த மதிப்பும் கிடையாது! ஆனால் இரக்கத்தின் ஐஸ்வரியமோ நித்தியத்தில் விலையேறப்பெற்ற மதிப்பையுடையதாகும்!!
இரக்க குணம் உள்ளவர்களே இரக்கம் பெறுவார்கள் என இயேசு கூறினார். யாக்கோபு 2:13, 14-ல் "இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்." மேலும் "ஒருவனுக்கு விசுவாசம் இருந்தும், வஸ்திரமோ, ஆகாரமோ இல்லாதவனைப் பார்த்து அவனுடைய சரீரத்திற்கு வேண்டியவைகளைக் கொடாவிட்டால் பிரயோஜனம் என்ன?" என்றும் யாக்கோபு கூறினார். இரக்க குணத்தின் முக்கியமான இரண்டு பகுதிகளை இவ்வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 1) தீமை செய்தவர்களுக்கு இரக்கமற்ற நியாயத்தீர்ப்பு செய்யாமல் அவர்களை மன்னிப்பது 2) தேவையுள்ள மனுஷர்களுக்கு இரங்கி உதவி செய்வது. ஆகாரமோ, வஸ்திரமோ ஆகிய அன்றாட தேவையில் குறைவுபட்டிருக்கும் தன் சகோதரனிடமோ அல்லது சகோதரியிடமோ "நீயே உன் தேவையை சமாளித்துக்கொள்" எனக் கூறிவிட்டு அவர்களுக்குத் தேவையானதை கொடுப்பதற்கு மனமில்லாது இருந்தால், அதுவே கொடிய இரக்கமில்லாத சுபாவமாகும் (வசனம் 15,16). இவ்வாறு நீங்கள் இருந்தால், உங்களுக்கு ஒரு தேவை வரும்போது, உங்கள் தேவைக்கும் தேவன் எதுவும் தரமாட்டார்! ஏனெனில் பிறருடைய தேவைக்கு அக்கறை கொண்டவர்கள் மீதே தேவன் அவர்களின் தேவைக்கு அக்கறை கொள்கிறார். ஆம், இரக்கம் உள்ளவனே தேவனிடமிருந்து இரக்கம் பெறுவான்.
ஜெபம்:
பரலோகப் பிதாவே! இப்பூவுலகில் யாரேனும் ஒருவரைக்கூட மன்னிக்க முடியாத கடின இருதயத்தை நாங்கள் வெறுக்கிறோம்! தேவை உள்ளவர்களிடத்தில் உமது மென்மையான இரக்க சுபாவம் காண்பித்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:- https://t.me/hisvoicetoday
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
Google Drive • Ebook • Download Now:
https://drive.google.com/folderview?id=19Jovj4_rjWgGPPs49g4GNX8GIP6756rA
0 Comments