இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 17
🔸️ நம் ஜீவியம் ஆண்டவராகிய இயேசுவின் ஒளியாய் பிரகாசித்திட வேண்டும்! 🔸️
யோவான் 1:4-ல் மனுஷருக்குள் இருக்கும் ஜீவியமே, ஒளி அல்லது வெளிச்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஜீவன் இயேசுவுக்குள் இருந்ததென்றும், அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாய் இருந்ததென்றும், இவ்வசனம் 'ஜீவனுக்கு' இயேசுவையே அடிப்படையாக வைத்துக் கூறுகிறது. இருள் சூழ்ந்த இந்த உலகத்தில், "இயேசுவின் ஜீவன் அல்லது இயேசுவின் ஜீவியம்" ஒன்றே ஒளியாக அழைக்கப்படுகிறது. அந்த இயேசுவின் ஜீவன் அல்லது ஒளி எனக்குள்ளும் பிரவேசித்து என் ஜீவிய வழிகளை ஆளுகை செய்து நடத்துமென்றால், நானும் இப்போது இவ்வுலகத்திற்கு ஒளியாய் இருந்திட முடியும். எப்படியெனில், "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்' (யோவான் 8:12) எனக் கூறிய ஆண்டவராகிய இயேசு, இப்போது சீடர்களிடம் திரும்பிப் பார்த்து, "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" எனக் கூறியதை கவனியுங்கள்!
"விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடி வைக்காமல்" எனக் கூறப்பட்டதற்கு காரணம், இன்று அநேகர் தாங்கள் இயேசுவின் சீடன் எனத் தங்கள் ஸ்தலங்களில் பகிரங்கமாய் அறிக்கை செய்வதற்கு தயங்கி, தாங்கள் பெற்ற வெளிச்சத்தை மறைத்துக் கொள்கிறார்கள். "மரக்கால்" என்பது வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தப்படும் "அளவுப்படி" ஆகும். அதாவது, நம்முடைய சாட்சியின் ஜீவியத்தை நம் வியாபார ஸ்தலத்திலோ, அல்லது வேலை ஸ்தலத்திலோ ஒருபோதும் மறைத்து வைக்கவே கூடாது!
அதேபோல நம் வீட்டிலும் விளக்கை விளக்குத் தண்டின் மீதுதான் வைக்கவேண்டும்! கிறிஸ்துவை பின்பற்றும் நம்முடைய தூய சாட்சி நம் வீட்டிலுள்ள அனைவருமே பகிரங்கமாகக் காணும்படி பிரகாசிப்பதாய் இருக்கவேண்டும். இவ்வாறு நாம் எங்கு சென்றாலும், இயேசுவின் ஜீவனாகிய ஒளியைப் பிரகாசிக்கச் செய்திட வேண்டும். இங்கு மீண்டும் "தரமே" ஒளியின் பிரகாசத்திற்கு வலியுறுத்தப்படுகிறது. உதாரணமாய், வீட்டிலுள்ள ஒரு 100 வாட்ஸ் பல்பு அளவில் சிறியதே ஆகும். இருப்பினும், அதிலுள்ள பிரகாசத்தின் வலிமை ஒரு பெரிய அறையையும் ஒளிமயமாக்குகிறது. எனவே அளவை அல்ல, ஜீவியத்தின் தரத்தையே இயேசு மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்!!
ஜெபம்:
பரம பிதாவே! நாங்கள் எங்கிருந்தாலும், "உமது ஒளியை" எங்கள் ஜீவியத்தில் பிரகாசித்திட தயவாய் அனுகிரகம் செய்யும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments