இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 20
🔸️ எந்த வயதிலும் பெற்றோர்களை கனம் செய்திட வேண்டும்! 🔸️
லூக்கா 2:51 விவரிக்கிறபடி, 'ஆண்டவராகிய இயேசு தன் பெற்றோர்களாகிய யோசேப்போடும் மரியாளோடும் வாழ்ந்த முப்பது வருடங்களும் அவருக்கு கீழ்ப்படிந்து அடங்கி இருந்தார்' என்பதேயாகும். இவ்வாறு அடங்கி ஜீவிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அவரைப் போலவே அந்தப் பிராயத்தில் வாழ்ந்த நம் யாவருக்கும் தெரியும்.
ஆகவேதான், நாம் இப்போது நம்முடைய பிள்ளைகளுக்கு "இயேசுவின் மாதிரியை" உயர்த்தி காண்பித்திட முடிகிறது. பிதாக்கள் தங்கள் பிள்ளைகளை "கர்த்தருக்கேற்ற போதனையில்" வளர்க்க வேண்டுமென எபேசியர் 6:4-ல் கட்டளையிடப் பட்டிருக்கிறார்கள். இந்த வசனம் குறிப்பிடும் "கர்த்தருக்கேற்ற போதனை" எது தெரியுமா? ஆம், இயேசு நாசரேத்து ஊரில் வாழ்ந்த வருடங்களின் "அவருடைய சொந்த வாழ்வின் மாதிரியையே" பிள்ளைகளுக்குப் போதனையாக தந்திருக்கிறார். "நம் ஆண்டவரின் மாதிரியைப் பின்பற்றும்" யாதொரு பையனும் அல்லது பெண்ணும்... இயேசுவுக்கு நடந்ததுபோலவே, அவர்களும் ஞானத்திலும், தேவ கிருபையிலும் அதிகமதிகமாய் விருத்தியடைவார்கள்!! (லூக்கா 2:52).
நாம் வளர்ந்து திருமணமான பின்பும்கூட, தொடர்ந்து நம் வயது சென்ற பெற்றோர்களை கனம் பண்ண வேண்டும். ஆதியாகமம் 9:21-27 வசனங்களில், ஒரு சமயம் நோவாவின் குமாரர்களில் ஒருவனான காம், தன் தகப்பன் குடித்து கூடாரத்தில் நிர்வாணமாய் படுத்திருப்பதைக் கண்டான். இவன், தான் கண்ட காட்சியை தன் சகோதரர்களிடத்தில் கூறி, தன் தகப்பனுக்கு அவகீர்த்தி கொண்டுவந்தான். காம் சொன்னது பொய்யல்ல, மெய்தான்... ஆனால், அவனோ தன் தகப்பனை கனவீனப்படுத்திவிட்டான். ஒருவன் உண்மையே பேசினாலும், புறங்கூறுகிறவர்களை தேவன் சபிக்கிறார். புறங்கூறுகிறவன் யாராக இருந்தாலும், அவன் இயேசுவின் சீஷனாய் ஒருக்காலும் இருந்திட முடியாது.
ஆகிலும், நோவாவின் அடுத்த இரண்டு குமாரர்களும் தங்கள் தகப்பனின் நிர்வாணத்தைப் பார்க்காமல், ஒரு வஸ்திரத்தை தங்கள் தோளில் வைத்து பின்னிட்டு வந்து, நிர்வாணத்தை மூடி, தங்கள் வயது சென்ற தகப்பனுக்கு கனம் செய்தார்கள். இதனிமித்தமாய், அவர்கள் இருவரும் அவர்கள் குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்! இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய போதகம் யாதெனில், "தங்கள் பெற்றோர்களை கனம் பண்ணுகிறவர்களை தேவன் ஆசீர்வதித்திருக்கிறார்! தங்கள் பெற்றோர்களை அசட்டை செய்பவர்களைத் தேவன் சபிக்கிறார்" என்பதேயாகும்.
ஜெபம்:
பரலோக பிதாவே! இயேசுவைப் போலவே, எங்கள் பெற்றோர்களை எங்கள் சிறுவயதிலிருந்து, வயது சென்ற காலம்வரை கனம் செய்து வாழ்ந்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments