இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 21
🔸️ நம் வாழ்வில் தேவசித்தம் நிறைவேறிட வேண்டும்! 🔸️
தாவீதை "என் இருதயத்திற்கு ஏற்றவனாக கண்டேன்" என அப்போஸ்தலர் 13:22-ம் வசனம் குறிப்பிடுவதற்கு ஓர் உறுதியான காரணம் உண்டு! அது என்னவெனில், அவன் 'தேவசித்தம்' ஒன்றையே தன் மிகப்பெரிய விருப்பமாய் வைத்து அதை நிறைவேற்றிட வாஞ்சித்தான் என்ற காரணமே ஆகும். இதை தாவீதே தன் சங்கீதத்தில் குறிப்பிட்டு "என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்" (சங்கீதம் 40:8) எனக் கூறினான்.
தாவீது ஒன்றும் பூரணமான மனுஷனல்ல. அவன் அநேகம் பாவங்கள் செய்திருக்கிறான். அவைகளில் ஒரு சில பாவங்கள் மிகக் கேடாக இருந்தபடியால், தேவன் அவனை வெகுவாய் தண்டிக்க வேண்டியதாயும் இருந்தது. அப்படியெல்லாம் இருந்தும், தேவனோ அவனை முழுவதுமாய் மன்னித்துவிட்டார்! அவன்மீது பிரியமும் வைத்தார்!! அது ஏனென்றால், "தன் வாழ்வில் தேவனுடைய சித்தம் முழுவதையும் நிறைவேற்றிட அவன் கொண்டிருந்த வாஞ்சையே" ஆகும். ஆகவே, நம்மிடம் எவ்வளவுதான் குறைவான ஜீவியம் காணப்பட்டாலும், நாமும்கூட தேவனுடைய இருதயத்திற்கேற்ற புருஷர்களாயும், ஸ்திரீகளாயும் மாறிவிட முடியும்!
அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? தாவீதைப்போலவே, ஆண்டவருடைய சித்தம் செய்வதற்கே நம் முழு இருதயமும் 'திசைமாற்றம்' கண்டிருக்க வேண்டும்!!
"ஆண்டவராகிய இயேசுவின் மாதிரியை பின்பற்றி, அவர் நடந்ததுபோலவே விசுவாசிகளாக நாமும் நடந்திட வேண்டும்" என்றே புதிய ஏற்பாடு வலியுறுத்துகிறது (1யோவான் 2:6). இயேசு கிறிஸ்துவின் முழு ஜீவியத்திற்கும் ஒரு வழிநடத்தும் ஆதாரமாய் இருந்த கோட்பாடு "தன் பிதாவின் சித்தத்தை மாத்திரமே செய்திட வேண்டும்" என்பதாகவே இருந்தது. தன் பிதா தனக்கு யாதொன்றைச் சொல்லும்வரை எந்த இடத்திற்கும் அவர் சென்றிடமாட்டார். ஆனால், தன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படி சென்றுவிட்டால், எதிரிகளுடைய அச்சுறுத்தலோ அல்லது நண்பர்களுடைய பரிவான கெஞ்சுதலோ அவரை ஒருக்காலும் நிறுத்தி வைக்க முடியவில்லை! ஆம், தன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதே அவருடைய அன்றாட போஜனமாயிருந்தது (யோவான் 4:34). ஒரு மனிதன் தன் சரீரத்தை போஷித்திட உணவுக்காக ஏங்குவதைப் போலவே, தன்னை அனுப்பினவருடைய சித்தத்தை நிறைவேற்றி முடிப்பதற்கு இயேசு ஏங்கி நின்றார்!
தேவனுடைய முழு சித்தத்தையும் நம் வாழ்வில் நிறைவேற்றி முடிப்பதற்கு இயேசு கொண்ட அதே 'பசி' விசுவாசிகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருந்திட வேண்டும்!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! தாவீதைப் போலவே, எங்கள் ஆண்டவர் இயேசுவைப்போலவே, எங்கள் வாழ்விலும் உம்முடைய சித்தம் நிறைவேறி முடியும் பாக்கியம் தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments