இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 28
🔸️ தேவ கிருபையைக் கொண்டு கண்களின் இச்சையை ஜெயித்திட முடியும்! 🔸️
ஆண்டவராகிய இயேசு மத்தேயு 5:27-ம் வசனத்திலிருந்து விபச்சாரத்தைக் குறித்து பேசினார். "விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரம் செய்தாயிற்று; உன் வலதுகண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்" (வசனம் 27-29). மலைப் பிரசங்கத்தில் இயேசு நரகத்தைக் குறித்து திட்டவட்டமாக கூறியிருப்பதைப் பாருங்கள்! ஒருவன் தன் சிந்தையில் அருவருப்பான எண்ணத்திற்கு இடம் தந்து, முடிவில் தன் கண்களினால் பாவம் செய்தால், அல்லது தன் கைகளினால் பாலியத்திற்குரிய பாவம் செய்தால், அவனுடைய முழு சரீரமும் நரகத்தில் தள்ளப்படும் என்று இயேசு எச்சரித்தார்.
இந்த எச்சரிப்பின் வசனங்களை இன்று எத்தனை பேர் அப்படியே விசுவாசிக்கிறவர்கள்? இன்று அநேகர், தேவன் தான் சொல்லுகிறபடியெல்லாம் செய்துவிடமாட்டார் என எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால், யோவான் 12:48-ல், "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்" என இயேசு கூறிய எச்சரிக்கையின் வார்த்தைகளுக்குச் செவி கொடுங்கள்.
'உன் கண் இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு' என இயேசு கூறியது "ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்ப்பதை" ஒப்பிட்டே கூறினார். இந்த மனிதன் அந்த ஸ்திரீயை தொடவோ அல்லது எவ்வகையிலும் நெருங்கவோ இல்லை. அவன் இச்சையோடு பார்த்ததே பாவத்தில் இடறி விழும்படி செய்துவிட்டது! புதிய உடன்படிக்கையில் இவ்வித உயர்ந்த பரிசுத்தத்தின் தரத்தையே இயேசு வலியுறுத்தினார்.
ஒருவேளை நீங்கள் சொல்லலாம்... "இவையெல்லாம் மிகவும் உயர்ந்த தரம்; இப்படியெல்லாம் வாழ்வதற்கு ஒரு மனிதனால் ஒருக்காலும் முடியாது" என்று. நீங்கள் சொல்வது சரிதான். மனுஷரால் கூடாத இத்தரத்தின்படி வாழ்வதற்கே, கிருபையும் பரிசுத்தாவியின் பெலனும் அவசியமாயிருக்கிறது! இதன் நிமித்தமே, நாம் கிருபாசனத்தண்டைக்குச் சென்று, தேவனிடம் கிருபையைக் கேட்பது மிகுந்த அவசியமாய் இருக்கிறது. இவ்வாறு கிருபையைப் பெறும் ஒருவன், "அவருடைய கிருபை எல்லாவற்றிற்கும் போதுமானது" என்ற உண்மையைக் கண்டு கொள்வான். இக்கிருபை எவ்வித அசுத்த பார்வையையும், எவ்வித அசுத்த சண்டைகளையும் ஜெயிப்பதற்கு நிச்சயமாய் போதுமானதேயாகும்!!
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! பரிசுத்தமே எங்கள் விருப்பம்... ஆகவே, கண்களின் இச்சையாகிய பாவத்தை ஜெயித்திட தயவாய் எங்களுக்கு உமது கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments