இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 29
🔸️ பொய் சொல்லும் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்! 🔸️
சங்கீதம் 58:3 "....தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்" எனக்கூறுகிறது. தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஒருவன் எப்படி பொய் சொல்லுவான்? கர்ப்பத்தில் இருக்கும்போது ஒருவன் பேசக் கூடுமோ? என நாம் கேட்கலாம். ஆனால் இவ்வசனம் கூறும் சத்தியம் யாதெனில், ஒருவன் பேசாமல் இருந்தும்கூட பொய் சொல்ல முடியும்! என்பதையே வலியுறுத்துகிறது. அதாவது, பொய்யானது வெறும் வார்த்தையைக் காட்டிலும் வலிமையானதாகும். ஒரு குறிப்பிட்ட தோற்றத்தின் மூலமாய் அல்லது நடக்கையின் மூலமாய், நாம் ஒரு வார்த்தைகூட பேசாமல் பிறரை ஏமாற்றி வஞ்சிக்க முடியும்! வார்த்தை ஏதும் பேசாமலே நடந்திடும் மாய்மால ஜீவியம் பொய்யின் வலிமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
அப்போஸ்தலர் 5-ம் அதிகாரத்தில் அனனியாவும், சப்பீராளும், பேதுருவுக்கு முன்பாய் நின்றபோது ஒரு வார்த்தைகூட பேசவில்லை! இருப்பினும், பேதுரு அனனியாவை நோக்கி: "பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?" எனக் கேட்டார் (வசனம் 3). இதிலிருந்து, ஒருவன் எந்த வார்த்தையும் பேசாமலே பொய் சொல்ல முடியும் என்ற உண்மையை அறியலாம். 'நம்மைக் குறித்து உண்மையல்லாத ஒன்றை ஒரு குறிப்பிட்ட தோற்றத்தின்மூலம் உண்மையாய் இருப்பதுபோல பாவனை செய்து நாம் யாவருமே பொய் சொல்ல முடியும்' என்ற உண்மையை அறியலாம்.
இந்நிகழ்ச்சியில், சபைக் கூட்டத்திற்கு வந்த அனனியா கர்த்தருக்கென்று தனக்குண்டான முழுமையையும் தராதிருந்தும், தன் பணம் முழுவதையும் தந்துவிட்டது போன்ற பாசாங்குடன் வந்து நின்றான். இந்த அனனியா தனக்கென்று கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டது எவ்விதத்திலும் பாவமாகாது. ஆனால் எல்லாம் கொடுத்து விட்டதுபோல், அவன் பாசாங்கு செய்ததே கொடிய பாவமான பொய்யாக மாறி, அவனை நியாயந்தீர்த்தது. பழைய ஏற்பாட்டின் தரத்தில் ஆணைக்குட்பட்டிருக்கும் ஒருவன் எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்பதாய் கூறப்பட்டது. ஆனால் புதிய உடன்படிக்கையில், "ஆணையே இடவேண்டாம்" என ஆண்டவராகிய இயேசு கூறிவிட்டார்.
இவ்வாறே யாக்கோபு 5:12-ம் வசனத்திலும் "வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம் பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்" என்று வாசிக்கிறோம்.
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! உள்ளதை உள்ளதென்றும் இல்லாதை இல்லதென்றும் பேசிட கிருபை தந்து, பொய்யிலிருந்து விடுதலை பெற உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments