இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 6
🔸️ பிறரை நியாயம் தீர்த்திட கூடாது! 🔸️
"நியாயத்தீர்ப்பு வழங்குவது" தேவனுடைய வழக்கமான பணி அல்ல என்றும், அவ்வாறு "நியாயத்தீர்ப்பு" செய்வது அவருடைய "வழக்கத்திற்கு மாறான அபூர்வமான பணி" என்றே வேதம் கூறுகிறது (ஏசாயா 28:21). ஆனால், இந்த குணாதிசயம் மனிதர்களாகிய நமக்கோ முற்றிலும் தலைகீழாக இருக்கிறது! ஆம், நமக்கோ பிறரை நியாயம் தீர்ப்பதே வழக்கமான பணியாய் இருக்கிறது!! இங்குதான் சாத்தான் தன்னுடைய விஷத்தை நமக்குள் ஆழமாய் பாய்ச்சியிருக்கிறான். ஏசாயா 61:2-ம் வசனத்தில், "ஆண்டவராகிய இயேசு அநுகிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்துவதற்கும்... தேவனுடைய நீதியை சரிகட்டும் ஒருநாளை பிரகடனம் செய்யவும் அபிஷேக்கப்பட்டார்" என வாசிக்கிறோம். தேவன் தயவாயும், கண்டிப்பாயும் இருக்கிறார் என்பதை நாம் ரோமர் 11:22 மூலம் அறிகிறோம். ஆனால் அவருடைய தயவிற்கும், கண்டிப்பிற்கும் உள்ள விகிதாச்சாரத்தை ஏசாயா 61-ம் அதிகாரமே நமக்கு வெளிப்படுத்துகிறது. அந்த விகிதாச்சாரம் 50:50 அல்ல, 365:1 என்பதேயாகும்!! பார்த்தீர்களா, இந்த தேவனுடைய மென்மையான குணத்தை சுதந்தரிப்பதற்கே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
நம்மில் எத்தனை பேர் "தாங்கள் அறியாமலே" பிறருக்கு ஊறு விளைவித்திருக்கவும், பிறரிடம் எவ்வித கரிசனையும் இல்லாமல் செயல்பட்டிருக்கவும், கடிதம் மூலம் பிறருக்கு சஞ்சலம் விளைவித்திருக்கவும் கூடும் என்பதை உணர்ந்திருக்கிறோம்? நம்மூலம் துன்பம் அடைந்தவர்களோ மிகவும் பொறுமையாக ஒரு வார்த்தைகூட பதில் பேசாமல், அவைகளைத் தாங்கி கொண்டதையும் நாம் உணராமலே இருக்கிறோம்?
ஆம், ஆண்டவராகிய இயேசுவின் மகிமையை நமக்கு தேவன் மீண்டும் பசுமையாய் வெளிப்படுத்தி காண்பிக்க நாம் தேவனிடம் கேட்கக்கடவோம்! அந்த பிரகாசமான வெளிச்சத்தில் நம் மாம்சத்திற்குள் ஆழமாய் காணும் சுயநலத்தையும், அடங்காத்தன்மையையும், சுய சித்தத்தையும், பெருமையையும், பிறரை நியாயம் தீர்க்கும் கடின இருதயத்தையும் நாம் கண்டிட முடியும்! அவ்வாறு நாம் கண்டு கொண்டால் மாத்திரமே, அவருக்கு முன்பாக, முகம் குப்புற விழுந்து மனந்திரும்பவும், துயரமடையவும் முடியும்! இவ்விதம் உங்கள் வாழ்வில் நடந்துவிட்டால், பிறரைக் குற்றப்படுத்தி நியாயந்தீர்ப்பதற்கு நாம் முழுவதுமாய் முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும்!!
நாம் "இயேசுவின் பரிசுத்த தரத்தை" அடையும்வரை நம்மை நாமே சுத்திகரித்துக் கொள்வதில் ஓயாதிருக்கக்கடவோம் (1யோவான் 3:3). உண்மையில் இதுதான் நம்முடைய இலக்காய் இருந்தால், ஆண்டவர் திரும்ப வரும் வேளையில், நாம் ஒருக்காலும் வெட்கமடைந்து பின்னடையவே மாட்டோம்!!
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே! பிறரை நியாயம் தீர்க்கும் கொடிய கடின உள்ளத்தை மாற்றி, பிறரிடம் மென்மையாய் வாழ்ந்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments