இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 7
🔸️ பிறர் நம்மிடம் "ஒளியை" காணவேண்டும்! 🔸️
ஒரு சமயம், ஆண்டவர் தன்னைப் பற்றிக் கூறும்போது, "நான் உலகத்தில் இருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" எனக் கூறினார் (யோவான் 9:5). ஆனால், ஆண்டவராகிய இயேசு இவ்வுலகத்தை விட்டுச் சென்ற பின்போ, "உலகத்திற்கு வெளிச்சமாக" நம்மையே நியமனம் செய்தார்! (மத்தேயு 5:14) இதுவே எந்த உத்தம கிறிஸ்தவனுக்கும் உரிய மிகப்பெரிய பொறுப்பாகும்!!
ஆண்டவராகிய இயேசு வெளிப்படுத்தின ஒளியானது, சில உபதேசங்களோ அல்லது போதனைகளோ அல்ல!! அது புதிய உடன்படிக்கை சத்தியம் கூட அல்ல!! தன்னுடைய 'ஜீவியத்தையே' ஒளியாகப் பிரகாசித்தார். இயேசுவினுடைய ஜீவியத்திலிருந்துதான் தெய்வீக சுபாவங்கள் நமக்கு ஒளியாக வீசியது!! "நாங்கள் வெளிச்சம் பெற்றிருக்கிறோம்" எனக் கூறி, பரிசுத்தாவியின் அபிஷேகத்தையும், பாவத்தின் மேல் பெற்றிடும் ஜெயத்தையும், இன்னும் இது போன்ற சத்தியங்களையே நாம் பெற்ற வெளிச்சமாக கூறிக் கொள்கிறோம். ஆனால், அது அல்ல.... "இயேசுவின் ஜீவியத்தையே" நாம் வெளிச்சமாக பிரகாசித்திட வேண்டும்!
புதிய ஏற்பாட்டில் இரண்டு முறை "தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை" என எழுதப்பட்டிருக்கிறது. ஆம், முதன்முதலாக நமக்கு தேவனைப்பற்றி இயேசுவே வெளிப்படுத்தினார் (யோவான் 1:18). இயேசு தன் கரங்களை ஒரு குஷ்டரோகியின் தோளோடு வைத்து அணைத்துக்கொண்டபோது, "தேவன் எப்படிப்பட்டவர்" என்பதை வெளிப்படுத்தினார்! அவர் காசுக்காரர்களை ஆலயத்திலிருந்து துரத்தியபோதும் "தேவன் எப்படிப்பட்டவர்" என்பதை வெளிப்படுத்தினார்!.... இவ்வாறாக, "என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்" (யோவான் 14:9) என்றே இயேசு தன் சீஷர்களிடம் திட்டமாகக் கூறினார். அந்த இயேசுவோ இப்பொழுது பரலோகத்திற்கு சென்றுவிட்டார்!
பிதாவை, இயேசுவினிடத்தில் சீஷர்கள் கண்டதைப் போலவே "நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பாய் இருந்தால்" தேவன் நமக்குள் நிலைத்திருப்பதையும், நம் சபையில் தேவன் இருப்பதையும் இன்றும் ஜனங்கள் காணமுடியும் (1யோவான் 4:12). சபையில் நம்மை கவனித்துப் பார்ப்பவர்கள் "கிறிஸ்து எப்படிப்பட்டவராக இருப்பார்!" என்பதை நம் மூலமாய் அறியக்கூடியதாக இருக்க வேண்டும்! இவ்வாறு நாம், ஜீவியத்தின் மூலமாய் "இயேசுவின் ஜீவனை" நம் வெளிச்சமாக பிரதிபலிக்கத் தவறியிருந்தால், நம்முடைய பிரதான அழைப்பிலிருந்தே தவறிவிட்டோம்! 'ஜீவிக்கும்' பொறுப்பையே நம்மிடம் தேவன் எதிர்பார்க்கிறார்!
ஜெபம்:
பரம பிதாவே! இயேசுவிடம் இருந்த "ஒளியான" ஜீவியத்தை ஜனங்கள் கண்டதுபோலவே, எங்கள் ஜீவிய ஒளியையும் பிறர் காணும்படி செய்து உம்மை மகிமைப்படுத்த உதவும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments