இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 2
🔸️ சிலுவை வீரரே! முன்னேறிச் செல்லுங்கள்!! 🔸️
யுத்தத்தில் எதிரிகள் மீது குறியாயுள்ள போர்ச் சேவகன் எவ்வாறு தன் பிழைப்பிற்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளாமல், அதிலிருந்து விடுதலையாகி இருக்கிறானோ, அதேபோல், நமக்கு ஏற்படும் சூழ்நிலைகளில் நாம் சிக்கிக் கொள்ளாமல் "சுயத்தை" அழிப்பதற்கே குறியாய் இருக்க வேண்டும்! ஆனால் காரியம் என்னவென்றால், இன்று கிறிஸ்தவ ராணுவத்தில் சேவகம் செய்திட தங்கள் பெயரை பதிவு செய்துகொண்ட அநேகர் தங்களுக்கு ஏற்படும் சூழ்நிலைகளுக்குள் சிக்கிக்கொண்டு உழளுகிறார்கள்! "மகிமை நிறைந்த" கிறிஸ்தவர்களாய் அல்ல, கஷ்டம் நிறைந்த கிறிஸ்தவர்களாகவே காணப்படுகிறார்கள்!
"கிறிஸ்துவின் பாடுகளுக்குள்" பிரவேசிக்க வேண்டிய இந்த வீரன், சூழ்நிலைகளின் வேதனைக்குள் சிக்கிக் கொள்கிறான்!!
தங்கள் தலையில் கை வைத்துக்கொண்டு "ஏராளமான பாடுகள்" என இவர்கள் குறிப்பிடுவதெல்லாம் இவர்கள் பங்கு பெற வேண்டிய "கிறிஸ்துவின் பாடுகள்" அல்ல... "சூழ்நிலைகளின் வேதனைகளே" ஆகும்!! இவர்கள் "சிலுவை" எனக் கூறுவதெல்லாம், "மனுஷரையும்" "சூழ்நிலைகளையுமே" சிலுவை எனக் கூறுகிறார்கள்! இவர்களா கிறிஸ்துவின் போர்வீரர்கள்? இல்லை, சூழ்நிலைகளில் நசிந்து தளர்ந்துபோன கோழைகள்! இரட்சிப்பின் அதிபதியாகிய தங்கள் கேப்டனுக்குப் புகழ்ச்சியை அல்ல, இகழ்ச்சியைக் கொண்டு வருபவர்கள்!! இவர்கள் தேவகிருபையில் பலப்பட்டவர்களா? இல்லவே இல்லை!
மெய்யான கிறிஸ்துவின் வீரன் உபத்திரவங்களில் மேன்மையே பாராட்டுவான்! (ரோமர் 5:4). கிறிஸ்துவின் பாடுகளில்தான் அதிக அதிகமாய் பங்கு பெறுவதை தனக்குக் கிடைத்த சிலாக்கியமாக கருதுவான். தான் அடையும் உபத்திரவங்களை, சூழ்நிலைகளை, தேவனுக்கு முன்பாக மாத்திரமே வைத்து, மகிமையில் பங்கடையச்செய்யும் தன் சிலுவையைச் சுமந்து தீவிரமாய் முன்னேறிக் கொண்டிருப்பான்!!
ஜெபம்:
அன்புள்ள பரலோக பிதாவே! கிறிஸ்துவின் நல்ல போர் சேவகனாய் சூழ்நிலைகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல், சிலுவை தாங்கி உம்மை விழிப்புடன் பின்பற்ற அனுக்கிரகம் செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments