இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 12
🔸️ இயேசுவின் நாமத்தைப் பயன்படுத்த நல்ல இருதயம் வேண்டும்! 🔸️
"எலியாவின் சால்வையைக்கொண்டு" யோர்தான் நதியின் தண்ணீரை எலிசா அடித்தான் என நாம் யாவரும் அறிந்திருக்கிறோம். எலியாவை, பரத்திற்குச் சென்ற கிறிஸ்துவுக்கும், இந்த எலிசாவை பூமியில் கிறிஸ்துவின் ஊழியத்தை தொடர்ந்து செய்வதற்கு வைக்கப்பட்ட சபைக்கும் ஒப்பிட்டு நாம் காணமுடியும் என்றால்.... எலியா விட்டுச்சென்ற சால்வையை, இயேசு தன் சபைக்கு ஒப்புவித்த "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு" நாம் ஒப்பிட முடியும்! யோர்தான் நதியின் ஊடாய் வழி உண்டாக்குவதற்கு எலிசா சால்வையை உபயோகித்ததைப் போலவே, நம் ஜீவிய பாதையில் தோன்றும் இடையூறுகளை அகற்றுவதற்கு தன் நாமத்தை உபயோகிப்பதற்குரிய அதிகாரத்தை இயேசு நமக்குத் தந்திருக்கிறார்!
ஆகிலும், மந்திர பாஷையைப்போல் இயேசுவின் நாமத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை! அவ்வாறு செய்தவர்கள் ஜீவியத்தில் எந்த வல்லமையும் வெளிப்பட்டதில்லை. அவர்கள் ஜீவியத்திற்குத் தடையாய் வந்த மலைகளைப் பெயர்த்திடவுமில்லை!!
ஒருசமயம், எலிசா கூறியபடி கேயாசி எழுந்து வந்து எலிசாவின் கோலை எடுத்து அதை மரித்த பிள்ளையின்மீது போட்டான். அவ்வேளையில் இந்த கேயாசி மிகுந்த அதிகாரத்தோடு "ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவனுடைய நாமத்தில் மரணத்தினின்று நீ எழுந்து நட!" என உரத்த சத்தமாய் கூறியிருந்திருப்பான். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை!
எனவே, ஒரு மனுஷன் பேசுகின்ற வார்த்தையை மாத்திரம் தேவன் பார்ப்பதில்லை! அவனுடைய இருதயத்தையே அவர் பார்க்கிறார். வார்த்தைகளை உபயோகிக்கும் மனுஷன் எப்படிப்பட்டவன் என்பதைப் பொறுத்தே அவனுடைய வார்த்தைக்கு வல்லமையும் இருக்கிறது!
கேயாசியின் இருதயம் தேவனுடைய மகிமையில் நிலை கொண்டிராமல் இவ்வுலகத்தின் மகிமையிலும், தன் சுய ஆதாயத்திலும் நிலைகொண்டிருந்ததை தேவன் நன்கு அறிந்திருந்தார்!!
எலிசாவின் இருதயமோ அப்படிப்பட்டதல்ல! அவனோ, தேவனுடைய மகிமை ஒன்றையே நாடினான்! ஆகவேதான், தேவன் தனது அதிகாரத்தை அவனுக்கு ஒப்புவிக்க முடிந்தது. அதனிமித்தமே, எலிசா ஜெபித்தவுடன், மரித்த பிள்ளை உடனடியாக உயிர் பெற்று எழுந்தது! யோர்தான் நதியை தன் சால்வையினால் அடித்தவுடன் இரண்டாய் பிளந்தது!!
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! "இயேசுவின் நாமத்தில்" வல்லமை உண்டு என்பதை எங்கள் நல்ல இருதயமான ஜீவியத்தில் நிரூபித்துக்காட்டிட கிருபை தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments