இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 15
🔸️ நாள்தோறும் இயேசுவின் பாதம் அமர்ந்து அவர் குரல் கேட்கவேண்டும்! 🔸️
ஒருவருடைய பாதத்தருகே அமர்வது தாழ்மையை சித்தரிப்பதாயிருக்கிறது. மரியாள் ஒரு நாற்காலியில் இயேசுவுக்கு சமமாய் உட்காராமல் ஒரு தாழ்ந்த ஸ்தானத்தில் அமர்ந்திருந்தாள். பெருமை கொண்ட ஒரு மனிதனிடம் தேவன் ஒருபோதும் பேசுவதில்லை. ஆனால், தனக்கு முன்பாக ஒரு பாலகனைப்போல் தாழ்மை கொண்டிருக்கும் ஆத்துமாவிடம் பேசுவதற்கே எப்போதும், ஆயத்தமுள்ளவராகவே இருக்கிறார்! (மத்தேயு 11:25). அமர்ந்திருக்க கற்றுக்கொண்டவர்கள், அடங்கியுமிருப்பார்கள். இதுவே தன் எஜமானனுக்கு முன்பாக ஒரு சீஷன் கொண்டிருக்கும் மனநிலையாகும். நாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிவதன் மூலமாகவே அடங்கியிருக்கும் சுபாவம் வெளிப்படுகிறது!
நம்முடைய ஆர்வத்தை பூர்த்தி செய்வதற்கோ அல்லது சில அறிவுபூர்வமான தகவல்களை நமக்குத் தருவதற்கோ தேவன் தன் வார்த்தையின் மூலமாய் நம்மிடத்தில் பேசுவதில்லை. நாம் கீழ்ப்படிய வேண்டுமென்றே நம்மோடு அவர் பேசுகின்றார். நமக்கு "தேவனுடைய சித்தத்தை செய்திட வேண்டும்" என்ற மனம் இருந்தால் மாத்திரமே, அந்த அவருடைய சித்தத்தை அறிந்து கொள்ளவும் முடியும் என இயேசு யோவான் 7:17-ல் தெளிவுபடக் கூறினார்.
வேத வசனத்தின் மூலமாய் தங்களோடு தேவன் எதை பேசிட விரும்புகிறார் என அறிந்திடும் ஆர்வமே இல்லாமல், இன்றைய திரளான கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை வருடக்கணக்கில் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள்! வேதத்தை வாசிப்பதில் ஒரு திருப்தி அடைந்தால் அது அவர்களுக்குப் போதும்!! வேதம் வாசித்திடும் ஒவ்வொருநாளும் ஆண்டவருடைய சத்தத்தை நீங்கள் கேட்கிறீர்களா? அப்படியில்லை என்றால், அதற்கு என்ன காரணம்? தன்னை கவனித்துக் கேட்பவர்களுக்கோ ஆண்டவர் நிச்சயமாய் பேசுகிறார்! அவ்வாறு இருக்க, உங்கள் ஆவியின் செவிகளை எது அடைத்து வைத்திருக்கிறது? அவருக்கு முன்பாக அமர்ந்திருக்கத் தவறியதினிமித்தமா?..... தாழ்மையுள்ள ஆவி இல்லாததனிமித்தமா?.... அவர் ஏற்கனவே உங்களிடத்தில் பேசியவைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாதிருந்த குற்றத்தின் நிமித்தமா?..... எதுவாயிருந்தாலும், அவை அனைத்திற்கும் உடனடியாகவும், நிரந்தரமாகவும் பரிகாரம் ஏற்படவே தேவன் விரும்புகிறார்! தேவனுக்கு முன்பாக இந்த பரிகாரத்தை நீங்கள் சரிசெய்த பின்பு, சாமுவேலின் ஜெபமாகிய "கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்!" என்ற ஜெபத்தை நீங்களும் ஏறெடுங்கள்! பிறகு, உங்கள் வேதாகமத்தைத் திருப்பி ஆண்டவருடைய முகத்தை ஆர்வமுடன் தேடுங்கள், இப்போது நீங்களும் அவருடைய சத்தத்தைக் கேட்பீர்கள், நிச்சயமாய் கேட்பீர்கள்!!
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! ஆர்வமுடன் உம் பாதம் அமர்ந்து உம் குரல் கேட்டு கீழ்ப்படிந்து வாழும் கிருபையை நித்தமும் எங்களுக்குத் தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments