இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 27
🔸️ சுத்த இருதயம் கொண்டவனே சந்தோஷ மனிதன்! 🔸️
எல்லா கிறிஸ்தவர்களுமே சந்தோஷமாக இருப்பதற்கு வாஞ்சிக்கிறார்கள். ஆனால் இயேசுவோ, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்" (மத்தேயு 5:8) என்றல்லவா கூறினார். பாக்கியவான்கள் என்ற பதத்திற்கு "சந்தோஷம்" என்பது மற்றொரு பொருளாகும். எனவே இங்கே இயேசு கூறுவது யாதெனில், "தூய்மையான பரிசுத்த ஜீவியத்திலிருந்தே உண்மையான சந்தோஷம் பிறக்கிறது!" என்ற செய்தியே ஆகும். பரலோகம் எப்போதும் குறைவில்லா மகிழ்ச்சி நிறைந்த இடமாக இருப்பதற்கு காரணம், அங்கு நிறைவான பரிசுத்தம் இருப்பதால்தான்! பரிசுத்தமில்லாத எந்த மகிழ்ச்சியும் போலியானதேயாகும். நாம் உண்மையில், "ஆண்டவரே! நான் பரிசுத்தமற்று இருந்தால் என்னை மகிழ்ச்சியற்றவனாக்கும்!" என்றே ஜெபிக்க வேண்டும். இல்லாவிட்டால், நம்முடைய ஆவிக்குரிய நிலைமையைக் குறித்து நாம் வஞ்சிக்கப்பட்டு ஏமாந்துபோக வாய்ப்பு உண்டு!
இன்று அநேக கிறிஸ்தவர்கள், தங்கள் ஜீவியத்தில் வல்லமை வேண்டுமென தேவனிடம் கேட்கிறார்கள். ஆனால் பரிசுத்தத்தின்மீது தீராத வாஞ்சை கொள்ளாமல் நீங்கள் வல்லமை கேட்டால், உங்கள் விண்ணப்பத்தில் தராசு போன்ற சமநிலை காணப்படவில்லை என்பதை இன்று அறிந்துகொள்ளுங்கள். இவ்வித சமநிலை இல்லாமல் வல்லமையைக் கேட்பது பெருத்த அபாயமாகும்! எப்படியென்றால், ஓர் அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர், கிருமி கொண்ட ஆயுதங்களை (unsterile) உபயோகபடுத்துவது எவ்வளவு அபாயகரமானதோ, அதைக்காட்டிலும் தேவன் தன் வல்லமையை பரிசுத்தமற்ற ஒரு மனிதனின் கையில் கொடுப்பது மிகுந்த அபாயமானதாகும்! அவ்விதம் தேவன் கொடுப்பது, ஜீவனுக்கு பதிலாக மரணத்தையே கொண்டுவரும். எனவேதான், இன்று அநேக கிறிஸ்தவர்களுக்கு தேவன் தன் வல்லமையை அளவில்லாமல் கொடுத்துவிட முடியவில்லை!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! "இருதயத்தில் பரிசுத்தம் இல்லையேல் மகிழ்ச்சியும் எனக்கில்லை" என்ற தரத்தில் என் ஜீவியம் அமைந்திட உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments