இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 29
🔸️ தேவனோடு ஐக்கியம் ஜெபத்தின் மேன்மை! 🔸️
ஆண்டவராகிய இயேசு தன் பிதாவோடு ஐக்கியம் கொண்டிருந்த நேரம் அவருக்கு 'பேரானந்தமே' ஆகும். நீங்கள் கடிகார அளவைப் பார்த்து ஜெபிப்பவர்களாய் இருந்தால், தேவனோடு நீங்கள் கொண்டுள்ள உறவு சரியாய் இல்லை என்பதே பொருளாகும். கிறிஸ்துவோடு நாம் கொண்டிருக்கும் உறவு மணவாளனோடு மணவாட்டி கொண்டிருக்கும் உறவிற்கு ஒப்பானது என வேதம் நமக்கு போதிக்கிறது.
திருமணத்திற்கென நிச்சயிக்கப்பட்டு, ஒருவரையொருவர் ஆழமாய் நேசிக்கும் மணவாளனும் மணவாட்டியும் தாங்கள் உறவாடும் நேரத்தை கடிகார அளவின்படி வைத்துக் கொள்கிறார்கள் என்பதாக கற்பனை செய்து பாருங்கள். அப்படியிருப்பது வினோதமான செயலே ஆகும். ஆம், மெய்யான அன்பு கொண்டவர்கள் தங்கள் ஐக்கியத்தை கடிகார அளவின்படி கணக்கிடவே மாட்டார்கள். இதைப் போலவேதான் ஜெபமும் இருக்கிறது. கிறிஸ்துவோடு மெய் அன்பு கொண்டு ஐக்கியம் கொண்டவர்கள் இத்தனை மணி நேரங்கள் ஜெபித்ததாக ஒருபோதும் ஜம்பம் அடித்துக்கொள்ள மாட்டார்கள்!!
வீண் வார்த்தைகளால் நாம் ஏன் ஜெபிக்க வேண்டாம் என்பதற்கு ஆண்டவராகிய இயேசு காரணம் கூறினார். ஏனெனில், "நீங்கள் வேண்டிக்கொள்வதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று உங்கள் பிதா அறிந்திருக்கிறார்" என்றே இயேசு கூறினார் (மத்தேயு 6:8). எனவே தேவைகளை அறிவிக்கும் செயலாக ஜெபம் இருக்கக்கூடாது. 'இன்னது தேவை' என்பதை அவர் ஏற்கனவே அறிந்திருக்கிறார். நம் தேவை, நம் சூழ்நிலை, நம் எதிர்காலம் ஆகிய யாவற்றையும் அவர் ஏற்கனவே அறிந்திருக்கிறார்!
உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர் நம்முடைய சூழ்நிலைகளை பல வருடங்களுக்கு முன்பாகவே அறிந்திருக்கிறார். "அப்படியானால், நாம் ஏன் ஜெபிக்கவேண்டும்?" ஜெபத்தின் உண்மையான நோக்கம்தான் என்ன? ஆம், ஜெபத்தின் முதல் பிரதான நோக்கம் பிதாவோடும் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் ஐக்கியம் கொள்ளும் உறவேயாகும்! இரண்டாவதான அவர் நோக்கம், நாம் தேவனோடு இணைந்து செயல்படும் உடன் ஊழியர்களாய் இருக்கவேண்டும் என்பதுமே ஆகும்! நாம் இதற்காகவே ஜெபிக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்.
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! எங்கள் ஜெப நேரம் உம்மோடு கொண்ட இன்பமான ஐக்கிய நேரம் என உணர்த்தியமைக்கு நன்றி! இந்த அன்பின் உறவு வளர கிருபை செய்தருளும்!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments